இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நடைபெற்றுவருகிறது. கிழக்கு ஜெருசலேம் பகுதி யாருக்குச் சொந்தம் என்பதே இரு தரப்பு மோதலின் மையமாக இருந்துவருகிறது. இந்தநிலையில், ஜெருசலேமில் உள்ள ஷைக் ஜாரா மாவட்டத்தில், யூதர்கள் உரிமை கொண்டாடும் நிலத்தில் வசித்துவரும் பாலஸ்தீன குடும்பங்களை வெளியேற்ற இஸ்ரேல் அரசு நடவடிக்கை எடுத்தது. இதன்தொடர்ச்சியாக, ஜெருசலேமில் உள்ள அல் அச்சா மசூதி அமைந்துள்ள பகுதியில் கடந்த 10 ஆம் தேதி இஸ்ரேல் போலீசாருக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்றது.
இதையடுத்து, பாலஸ்தீனத்தின் காசா முனையைத் தன்னாட்சி உரிமைபெற்று ஆட்சி செய்துவரும் ஹமாஸ் போராளிகள் அமைப்பு, இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பு மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுவந்தனர்.
இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதல்களால் காசா நகரில் உயிரிழப்புகள் அதிகரித்தன. இதனிடையே அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் இருதரப்பும் சண்டையை நிறுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுத்திவந்தன. எகிப்து நாடு, இஸ்ரேலுக்கும் ஹமாஸ் குழுவிற்கும் மத்தியஸ்தம் செய்துவைக்கும் வகையில் தூதுக் குழுவையும் அனுப்பியது.
இந்தநிலையில், உலக நாடுகளின் அழுத்தம் மற்றும் சமாதான முயற்சிகள் காரணமாக இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பு என இருவரும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர். இதனை இருதரப்புமே ஒப்புக்கொண்ட நிலையில், இன்று (21.05.2021) அதிகாலை 2 மணிமுதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து காசா மக்கள், பாலஸ்தீன கொடியோடு போர் நிறுத்தத்தைக் கொண்டாடினர். போர் நிறுத்தத்தை தொடர்ந்து மக்களிடம் உரையாற்றிய ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர், இஸ்ரேல் வான்வழி தாக்குதலால் இடிந்த வீடுகள் மீண்டும் கட்டித்தரப்படும் என அறிவித்துள்ளார்.
இந்த 11 நாள் சண்டையில் இஸ்ரேல் தரப்பில் இரண்டு குழந்தைகள், ஒரு இந்தியர், தாய்லாந்து நாட்டைச் சேர்த்த இருவர் என 12 பேர் பலியாகியுள்ளனர். பாலஸ்தீன தரப்பில் 232 பேர்வரை இறந்துள்ளனர். இவர்களில் 65 குழந்தைகளும் அடங்குவர்.