Skip to main content

கரோனாவைக் கட்டுப்படுத்தும் பாம்பு விஷம் -  பிரேசில் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

Published on 01/09/2021 | Edited on 01/09/2021

 

corona medicine

 

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரசுக்கு பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கரோனா சிகிச்சைக்குத் தனியாக மருந்து இதுவரைக் கண்டறியப்படவில்லை. வேறு நோய்களுக்கானச் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகளே கரோனாவிற்குச் சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

 

இந்தநிலையில் உலகில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், கரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சூழலில், பிரேசில் நாட்டு விஞ்ஞானிகள் பாம்பு விஷம் கரோனாவை கட்டுப்படுத்துவதைக் கண்டறிந்துள்ளனர். ஜரரகுசு பிட்விபர் என்ற பாம்பின் விஷம், குரங்கின் உடலில் கரோனா பரவுவதை 75 சதவீதம் கட்டுப்படுத்துவதைக் கண்டறிந்துள்ளனர்.

 

இந்த ஆய்வை நடத்திய ரபேல் கைடோ என்ற விஞ்ஞானி, ஜரரகுசு பிட்விபர் பாம்பின் விஷத்திலுள்ள மூலக்கூறு, கரோனா வைரஸில் உள்ள முக்கிய புரதத்தைக் கட்டுப்படுத்துவதைத் தாங்கள் கண்டறிந்துள்ளதாகக் கூறியுள்ளார். அதேநேரத்தில் பாம்பின் விஷத்திலுள்ள மூலக்கூறு பெப்டைட் என்றும், அதை ஆய்வகத்தில் உருவாக்க முடியும் என்பதால் ஜரரகுசு பிட்விபர் பாம்புகளை பிடிக்கவோ வளர்க்கவோ தேவையில்லை எனவும் ரபேல் கைடோ தெரிவித்துள்ளார்.

 

பாம்பின் விஷத்திலுள்ள மூலக்கூறு கரோனாவைக் கட்டுப்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது, கரோனாவிற்கு மருந்து தயாரிக்கும் முயற்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்