பொலிவியா நாட்டில் கடந்த 11 ஆண்டுகளாக தனது இணைக்காக தனிமையில் காத்திருக்கும் தவளை கவனம் பெற்றுள்ளது.
உலகிலேயே தனிமையில் இருக்கும் ஒரே தவளை என அழைக்கப்படும் இதன் இனம் அழிந்துபோவதிலிருந்து தடுக்க, அந்த ஜூலியட் வந்தே தீரவேண்டும். இதற்காக உலக வனவிலங்குகள் பாதுகாப்பு நிறுவனம், பிரபல டேட்டிங் இணையதளமான மேட்ச்.காம் மற்றும் பொலிவிய நாட்டின் ஊர்வன பாதுகாப்பு அமைப்பு இணைந்து நிதி திரட்டி வருகின்றன. செஹுவேன்காஸ் என்ற இனத்தைச் சேர்ந்த இந்த தவளைக்காக 15 ஆயிரம் டாலர் நிதியை காதலர் தினத்திற்கு முன் திரட்டவும் இந்த அணி முடிவு செய்துள்ளது.
மேட்ச் இணையதளத்தில் இந்தத் தவளை குறித்து முன்வைக்கப்பட்டுள்ள தன்குறிப்பில், இதுவரை திருமணமே ஆகாதவர், குழந்தைகள் கிடையாது மற்றும் கண்டிப்பாக குழந்தைகள் பெற்றாக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் தவளையின் மன ஓட்டங்களைப் பிரதிபலிக்கும் விதமாக வரும் குரல், ‘நான் ஒரு அழகான, சாதாரண பையன். நான் இரவுகளை வீட்டில் கழிக்க ஆசைப்படுகிறவன். சாப்பிடப் பிடிக்கும்; யாருக்குத் தான் பிடிக்காது? என்னைப் போன்ற தவளைக்கு இங்கு என்ன வேலை என நீங்கள் அதிசயித்திருப்பீர்கள் என உறுதியாக என்னால் கூறமுடியும். நான் என்னுடைய இணையைத் தேடி இங்கு வந்திருக்கிறேன். உங்களைப் போலவே (சோகமான குரலில்)’ விவரிக்கிறது.
இதுகுறித்து மேட்ச் இணையதளத்தின் செயல் அதிகாரி ஹெசம், ‘ரோமியோவுக்கான இணையைத் தேடுவது எங்களுக்கு வந்துள்ள மிகப்பெரிய சவால். ஆனால், அதன் ஒட்டுமொத்த இனமும் அழியாமல் இருக்க இதை நாங்கள் நிறைவேற்றியே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக தனது இணைக்காக ரோமியோ ஏங்குவதாகவும், கூடிய விரைவில் அதற்கு அந்த வசதியை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் அதன் பராமரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.