உலகை அச்சுறுத்தி வரும் தீவிரவாத இயக்கங்களில் ஐஎஸ் ஐஎஸ் இயக்கத்தின் தலைவரான அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரைஷி, அமெரிக்க படைகளிடம் சிக்காமல் இருக்க வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
துருக்கி எல்லையில் உள்ள சிரியாவின் அட்மேயின் நகரில், ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மடியில் வசித்து வந்த அவரை, அமெரிக்க படைகள் சுற்றி வளைத்ததை தொடர்ந்து வெடிகுண்டு ஒன்றை வெடிக்கச் செய்துள்ளார். இதில் அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரைஷி, அவரது மனைவி, அவரது இரண்டு குழந்தைகள் ஆகியோர் உடல் சிதறி பலியாகியுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரைஷி, குறிப்பிட்ட அந்த கட்டிடத்தில் வசித்து வந்ததை அமெரிக்கா கண்டுபிடித்ததாகவும், அதனைத்தொடர்ந்து அவரை பிடிக்க திட்டம் திட்டப்பட்டதாகவும் தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரிகள், கடந்த செவ்வாய் கிழமை அன்று திட்டத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இறுதி ஒப்புதலை அளித்ததாகவும் கூறியுள்ளனர்.
மேலும் அதிபர் ஜோ பைடனும், துணை அதிபர் கமலா ஹாரிஸும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதை வெள்ளை மாளிகையில் இருந்து கண்காணித்து வந்துள்ளனர். அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரைஷி தற்கொலை செய்துகொண்டதை ஜோ பைடன், நம்பிக்கையிழந்த கோழையின் கடைசி செயல் என வர்ணித்துள்ளார்.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் நிறுவனர் அபு பக்கர் அல்-பாக்தாதியும் அமெரிக்க படைகள் சுற்றி வளைத்தபோது, வெடிகுண்டை வெடிக்க செய்து தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.