ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நீண்டகாலமாகவே பிரச்சனை நிலவி வரும் நிலையில், தற்போது ரஷ்யா உக்ரைன் எல்லையில் படைகளை குவித்துள்ளது. இதனால் ரஷ்யா எந்த நேரமும் உக்ரைன் மீது படையெடுக்கும் என கருதப்படுகிறது. ஆனால் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டமில்லை எனக் கூறி வருகிறது. ஆனால் இதனை நம்பாத அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள், உக்ரைனுக்கும், கிழக்கு ஐரோப்பாவிற்கும் அதிநவீன பாதுகாப்பு ஆயுதங்களையும், போர் கப்பல்களையும், போர் விமானங்களையும் அனுப்பியுள்ளன. அமெரிக்கா தனது படைகளையும் கிழக்கு ஐரோப்பாவிற்கு அனுப்பியுள்ளது.
இந்தநிலையில் ரஷ்யா, உக்ரைனுக்கும் தங்கள் நாட்டிற்கும் அருகில் உள்ள பெலாரஸ் நாட்டில் போர் பயிற்சிகளை தொடங்கியுள்ளது. இதனால் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்த வாரத்திற்குள் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், ”பெரிய இராணுவ நடவடிக்கை ஒன்று விரைவில் தொடங்குவதற்கான சூழல் அமைந்துள்ளது” என கூறியுள்ளதோடு, இந்த வாரத்திற்குள், அனேகமாக இரண்டு நாட்களுக்குள் ரஷ்யா உக்ரைன் மீதான படையெடுப்பை தொடங்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் படையெடுப்பை தொடங்குவது பற்றி புதின் முடிவெடுத்துவிட்டார் என தாங்கள் கூறவில்லை என தெரிவித்துள்ள ஜேக் சல்லிவன், களத்தில் காண்பதை வைத்தும், உளவுத்துறை தகவலை வைத்தும் தாங்கள் இந்த கவலையை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.