கரோனா வந்தாலோ, அறிகுறி இருந்தாலோ அந்நபருக்கு வாசனை அறியும் திறனும், ருசியறியும் திறனும் பாதிக்கப்படும் என்பது தெரிந்ததுதான். ஆனால், மிகமிக அபூர்வமாக சிலருக்கு வேறு சில பின்விளைவுகளும் ஏற்படுகிறதாம்.
உதாரணத்துக்கு மணக்க மணக்க வைக்கப்படும் சாம்பார், இந்த பின்விளைவு ஏற்பட்டவர்களுக்கு கெட்டுப்போன உணவைப் போல நாற்றமடிக்கக்கூடும். சூடான ஆவி பறக்கும் தேநீர், சாக்கடையைப் போல குமட்டக்கூடும்.
இப்படியெல்லாம் பின்விளைவு வருமா என்றால், அரிதாக சிலருக்கு வரலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். உணவின் வாசனையோ, ருசியோ முற்றிலும் தெரியாமல் போவதற்கு அநோஸ்மியா எனப் பெயர். ஆனால், உணவின் நல்ல வாசம் அழுகல் வாசனையாகத் தெரிவதற்கு பரோஸ்மியா எனப் பெயர்.
ஏதாவது நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டு இயல்பான நிலைக்கு மாறும்போது சிலருக்கு இந்த பரோஸ்மியா பிரச்சனை வரலாம். உணவின் ஈர்க்கக்கூடிய வாசம் அருவருப்பான வாசனையாக மாறுவதால் சிலர் சாப்பிட இயலாமலும், மீறிச் சாப்பிட்டால் வாந்தி வருவது போலும் உணரலாம் என்கிறார்கள்.
கரோனாவில் உணவின் வாசனையை அறிய முடியாமல் போவது, அந்நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலோனோருக்கு வரும் அறிகுறி. ஆனால் இந்த பரோஸ்மியா அறிகுறி வெகு வெகு அரிதாகவே சிலருக்கே வருவதால் அச்சப்படத் தேவையில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.