உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ஐந்தாவது நாளாக தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதன் கராணமாக லட்சக்கணக்கான உக்ரைனியர்கள், தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்தச்சூழலில் உக்ரைன் ரஷ்யாவோடு பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்துள்ளது.
இதற்கிடையே ரஷ்ய அதிபர் புதின், அணு ஆயுதப் படைகளை தயாராக இருக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் நேற்று நடந்த ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில், பொதுச்சபையின் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்குப் பாதுகாப்பு கவுன்சிலின் 11 உறுப்பினர்கள் ஆதரவளித்தனர். அதனைத் தொடர்ந்து ஐ.நா பொதுச்சபையின் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஐநா பொதுச்சபையின் அவசர கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மூன்று நாடுகள் பொதுச்சபையின் அவசர கூட்டத்தை கூட்டுவதற்கான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை புறக்கணித்தன என்பதும், நடைமுறை வாக்கெடுப்பு என்பதால், ரஷ்யாவின் வீட்டோ அதிகாரம் இந்த வாக்கெடுப்பில் செல்லுபடியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.