உக்ரைனில் சுமி பகுதியில் இருந்து உயிரைப் பணயம் வைத்து எல்லையை நோக்கி நகரப் போவதாக, அங்குள்ள இந்திய மாணவர்கள் காணொளி வெளியிட்டிருந்த நிலையில், தேவையில்லாத பாதகமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. தற்போது இருக்கும் இடத்திலேயே தங்கி இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
உக்ரைனில் சுமி பகுதியில் ரஷ்ய படைகள் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள இந்தியர்களை மீட்க முடியாத நிலை நிலவுகிறது. இச்சூழலில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால், பொறுமை இழந்த இந்திய மாணவர்கள், உயிரை பணயம் வைத்து, அங்கிருந்து எல்லை நோக்கி நகரப்போவதாகத் தெரிவித்து காணொளி வெளியிட்டனர்.
இந்த நிலையில், மாணவர்கள் ஆபத்தான முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டிருப்பதாக, இந்திய வெளியுறவுத்துறைச் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி கூறியுள்ளார். இது தொடர்பாக, அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், மாணவர்களைத் தொடர்புக் கொள்ளும் நடவடிக்கைகளில் வெளியுறவுத்துறை அமைச்சகமும், தூதரகமும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகக் கூறியுள்ளார். மேலும், இருக்கும் இடத்திலேயே மாணவர்கள் தங்கியிருக்க வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்திய மாணவர்களைப் பத்திரமாக மீட்க உடனடியாக போரை நிறுத்துமாறு உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாட்டு அரசுகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதற்கிடையே, சுமி மற்றும் பிஷோசின் பகுதியில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்க அனைத்து வழிகளையும் ஆராய்ந்து வருவதாக, இந்திய தூதரகமும் தெரிவித்துள்ளது. பிஷோசினில் இருந்து 250 மாணவர்களை மீட்க பேருந்து அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் பேருந்து அங்கு சென்றடைந்து விடும் என்றும் அதுவரை மாணவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சுமியில் இருக்கும் மாணவர்களை பத்திரமாக மீட்க செஞ்சிலுவைச் சங்கத்துடன் பேசி வருவதாகவும், பாதுகாப்பான பாதையை அடையாளம் காணுமாறு அவர்களிடம் கோரப்பட்டுள்ளதாகவும் இந்திய தூதரகம் கூறியுள்ளது.