மாலத்தீவுக்கு இந்தியா தனது இராணுவத்தை அனுப்பி தேவையில்லாத பிரச்சனைகளுக்கு வழிவகுக்கக் கூடாது என சீன ஆளுங்கட்சியின் பத்திரிகையான குளோபல் டைம்ஸ் எச்சரித்துள்ளது.
மாலத்தீவுகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்நாட்டு அதிபர் நெருக்கடி நிலையை அறிவித்தார். அதைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கைது செய்யப்பட்டனர். இராணுவத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது. இந்நிலையில், மாலத்தீவில் நிலவும் அரசியல் சிக்கல்களுக்குத் தீர்வுகாண இந்திய அரசு தமது ராணுவத்தை அனுப்பவேண்டும் என மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நசீது கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், ஐ.நா. சபையின் வலியுறுத்தல் இல்லாமல் வேறு எந்த நாடும் மாலத்தீவு விவகாரத்தில் தலையிடக்கூடாது என்றும், சீனாவும் அதில் தலையிடாது என்றும் குளோபல் டைம்ஸ் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியா அதன் ராணுவத்தை மாலத்தீவுக்கு அனுப்பினால் சீனா அமைதியாக இருக்கும் என்று அர்த்தமில்லை எனவும், அப்படி இந்தியா நடந்துகொள்வது தேவையில்லாத பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் எனவும் அந்தப் பத்திரிகை செய்தி எச்சரிக்கும் விதமாக வெளியிடப்பட்டுள்ளது.