கார்கில் ரயில் நிலையத்தில் இந்திய மாணவர்களை ரயில் ஏறவிடாமல் உக்ரைன் மக்கள் தடுப்பதாக இந்திய மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளார்கள்.
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடைபெற்றுவரும் போர் காரணமாக உக்ரைனில் அசாதாரண சூழல் நிலவுகிறது. தொடர்ந்து, ஏழாவது நாளாகத் தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா, பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி தலைநகர் கீவ்-வை நோக்கி முன்னேறிவருகிறது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் ராணுவ விமானம் மூலம் அழைத்துவரப்படும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்-வில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அந்த நகரத்தைவிட்டு வெளியேறுமாறு இந்தியத் தூதரகம் கடந்த சில நாட்களாக அறிவுறுத்தி வருகிறது. நடந்தாவது பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுங்கள் என்று இந்தியத் தூதரகம் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் கார்கிவ் ரயில் நிலையத்தில் மட்டும் இந்திய மாணவர்கள் 1000க்கும் மேற்பட்டவர்கள் வெளியேறக் காத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்திய மாணவர்களை அங்கிருக்கும் உக்ரைன் மக்களில் சிலர் அடித்து விரட்டுவதாகவும், ரயில்களில் ஏறவிடாமல் தடுப்பதாகவும் இந்திய மாணவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளார்கள். இந்தியத் தூதரக அதிகாரிகள் இதுகுறித்து உக்ரைன் அதிகாரிகளுடன் பேசி இதற்கு தீர்வு காண வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.