
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் செல்வப்பெருந்தகையின் செயல்பாடுகள் மீது அதிருப்தி இருப்பதாக கட்சியின் மாவட்ட தலைவர்கள் பலர் டெல்லியில் முகாமிட்டு தங்களுடைய புகாரை தெரிவித்துள்ளனர்.
இருபதுக்கு மேற்பட்ட காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் செல்வப்பெருந்தகை மீது அதிருப்தி கொண்டு இதுகுறித்து புகார் தெரிவிப்பதற்காக டெல்லியில் முகாமிட்டனர். தொடர்ந்து தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஸ் ஜோடாங்கரை சந்தித்து, செல்வப்பெருந்தகை பல விஷயங்கள் தன்னிச்சையாக செயல்படுகிறார் என்று புகார் தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவர்கள் மீது வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் விருதுநகர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், 'பெருந்தலைவர் ஆட்சியை பார்க்காத, படிக்காதவர் அதை மற்றவைகளுடன் ஒப்பிடுவது தவறு. அன்பு தலைவர் ராஜீவ் காந்தியின் கனவு காமராஜர் ஆட்சி. அது உண்மையான காங்கிரஸ்காரர்களின் கனவு. அது ஒரு நாள் நடக்கும்' என தெரிவித்திருந்தார்.
திமுக ஆட்சியை செல்வப்பெருந்தகை காமராஜர் ஆட்சி என குறிப்பிட்டு பேசி வருவதை எதிர்க்கும் வகையில் மாணிக்கம் தாகூரின் இந்த எதிர்ப்பு இருந்தது. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட செல்வப்பெருந்தகையிடம் மாணிக்கம் தாகூரின் இந்த பதிவு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், 'மாணிக்கம் தாகூர் புரிதல் இல்லாமல் இருக்கிறார். எங்கெல்லாம் நல்லாட்சி நடக்கிறதோ அதெல்லாம் காமராஜர் ஆட்சி தான். மாணிக்கம் தாகூர் கருத்து புரிதல் இல்லாத ஒன்று' என பதிலளித்துள்ளார்.
பெருந்தலைவர் ஆட்சியை பார்க்காத , படிக்காதவர் அதை மற்றவைகளுடன் ஒப்பிட்டுவது தவறு.
— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) February 17, 2025
அன்புதலைவர் ராஜீவ் காந்தியின் கனவு காமராஜ் ஆட்சி ,அது உண்மையான காங்கிரஸ்கார்களின் கனவு.
ஒரு நாள் அது நடக்கும். #காமராஜர்ஆட்சி