வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே கடந்த 1971ஆம் ஆண்டு நடைபெற்ற போரில், பல ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவில் சரணடைந்தனர். அதன் விளைவாக பாகிஸ்தானிடம் இருந்து கிழக்கு பாகிஸ்தான் பிரிந்து நாளடைவில் வங்கதேசம் என்ற பெயரில் தனிநாடாக உருவெடுத்தது. இந்த போரை நினைவு கூரும் வகையில், இந்தியாவில் ‘விஜய் திவாஸ்’ என்ற பெயரில் ஆண்டுதோறும் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று முன் தினம் (16-12-24) இந்த தினம் இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டது.
அதன்படி, இந்த போரில் மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கருத்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு வங்கதேசம் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்ததாவது, ‘இன்று, விஜய் திவாஸ் அன்று, 1971 இல் இந்தியாவின் வரலாற்று வெற்றிக்கு பங்களித்த துணிச்சலான வீரர்களின் தைரியம் மற்றும் தியாகங்களை நாங்கள் மதிக்கிறோம். அவர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு மற்றும் அசைக்க முடியாத உறுதி, நமது தேசத்தைப் பாதுகாத்து நமக்குப் பெருமை சேர்த்தது.
இந்த நாள் அவர்களின் அசாதாரண வீரம் மற்றும் அவர்களின் அசைக்க முடியாத ஆன்மாவுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. அவர்களின் தியாகங்கள் தலைமுறைகளுக்கு என்றென்றும் ஊக்கமளிக்கும் மற்றும் நமது தேசத்தின் வரலாற்றில் ஆழமாகப் பதிந்திருக்கும்’ எனப் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், பிரதமர் மோடியின் இந்த பதிவுக்கு வங்கதேசம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வங்கதேச அரசின் இடைக்கால சட்ட ஆலோசகர் ஆசிப் நஸ்ரூல் தெரிவித்ததாவது, “நான் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறேன். டிசம்பர் 16, 1971, வங்கதேசத்தின் வெற்றி நாள். இந்த வெற்றியில் இந்தியா ஒரு கூட்டாளியாக இருந்தது, அதற்கு மேல் எதுவும் இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார். ஆசிப் நஸ்ரூல் மட்டுமின்றி இடைக்கால அரசின் அதிகாரிகள் பலர் பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், பாகுபாடுகளுக்கு எதிரான மாணவர் இயக்கத்தின் தலைவர் கூறியதாவது, “இது வங்கதேசத்தின் விடுதலைப் போர். பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசம் சுதந்திரம் பெறுவதற்காக போர் நடந்தது. ஆனால், இது இந்தியாவின் போர் மற்றும் சாதனை என்று மோடி கூறியுள்ளார். அவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் வங்கதேசத்தின் இருப்பை முற்றிலும் புறக்கணித்துவிட்டனர்” என்று தெரிவித்துள்ளார். அதே போல், வங்கதேச தேசியவாத கட்சி சார்பில் இஸ்ராக் கொஷைன் கூறியதாவது, “வங்கதேசத்தின் வெற்றி தினமான டிசம்பர் 16ஆம் தேதியன்று பிரதமர் மோடி வெளியிட்ட தவறான கருத்துக்கு நான் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். மோடியின் வார்த்தைகளால், நமது விடுதலை போரையும், நமது தியாகிகளையும், நமது கண்ணியத்தை குலைக்கிறது. இது போன்ற செயல்களால், இந்தியா- வங்கதேசம் இடையிலான உறவுக்குள் நல்லது நடக்காது” என்று தெரிவித்துள்ளார்.