ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர். அண்மையில் தலைநகர் காபூல் நகரை தலிபான்கள் சுற்றி வளைத்தனர். இதனைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ஃரப் கனி, தனது குடும்பத்தினருடன் நாட்டைவிட்டு தப்பி ஓடியதாகவும், தப்பி ஓடும்போது மூட்டை மூட்டையாக பணத்தை எடுத்துச் சென்றதாகவும் தகவல் வெளியானது.
இருப்பினும் தப்பிச் சென்ற அஷ்ஃரப் கனி எங்கே இருக்கிறார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில் நேற்று (18.08.2021), அஷ்ஃரப் கனி தங்கள் நாட்டில்தான் இருக்கிறார் என ஐக்கிய அரபு அமீரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன்பிறகு அஷ்ஃரப் கனி, ஆப்கான் மக்களுக்கு வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ செய்தியில் அவர், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்க விரும்பவில்லையென்றும், ஆப்கானிஸ்தானுக்குத் திரும்ப பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் கூறியுள்ளார். "தற்போது இரத்தம் சிந்துவதைத் தடுப்பதற்காகவும், குழப்பத்தைத் தடுப்பதற்காகவும் அமீரகத்தில் இருக்கிறேன்" என தெரிவித்துள்ள அஷ்ஃரப் கனி, "உங்கள் அதிபர் உங்களை விற்றுவிட்டு தனது சொந்த நலனுக்காகவும், தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ளவும் தப்பிச் சென்றுவிட்டார் என யார் கூறினாலும் நம்பாதீர்கள். இந்தக் குற்றசாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. நான் அவற்றைக் கடுமையாக மறுக்கிறேன்" எனவும் கூறியுள்ளார்.
"நான் அங்கிருந்திருந்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்கன் அதிபர் ஒருவர், ஆப்கானின் கண்களுக்கு முன்பு மீண்டும் ஒருமுறை தூக்கில் தொங்கவிடப்பட்டிருப்பார்" என கூறியுள்ள அஷ்ஃரப் கனி, ஆப்கானைவிட்டு வெளியேறியபோது காரிலும் ஹெலிகாப்டரிலும் பணத்தை எடுத்துச் சென்றதாக எழுந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். காலணியைக் கழட்டிவிட்டு பூட்ஸை அணியக் கூட வாய்ப்பில்லாத நிலையில்தான் ஆப்கானைவிட்டு வெளியேறியதாக அஷ்ஃரப் கனி தெரிவித்துள்ளார்.