ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் அங்கு தங்களின் இடைக்கால அரசை அமைத்துள்ளனர். இந்தநிலையில், சில நாட்களுக்கு முன்பாக பஞ்ச்ஷீர் மாகாணத்தைக் கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் அறிவித்தனர்.
ஆனால் இதனை மறுத்துள்ள தேசிய எதிர்ப்பு முன்னணி என பெயரிடப்பட்டுள்ள தலிபான் எதிர்ப்பு குழு, "பஞ்ச்ஷீர் வீழ்ந்துவிடவில்லை. 60 சதவீத பஞ்ச்ஷீர் இன்னும் எங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. தந்திரமாக பின்வாங்கியுள்ளோம். தலிபான்கள் சிங்கத்தின் குகைக்குள் நுழைந்துவிட்டார்கள். அதற்கான விளைவுகளை அனுபவிப்பார்கள்" என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் முன்னாள் துணை அதிபரும், தேசிய எதிர்ப்பு முன்னணியை அஹ்மத் மசூத்துடன் இணைந்து வழிநடத்திவருபவருமான அம்ருல்லா சலேவின் சகோதரர் ரோஹுல்லா சலேவை தலிபான்கள் சித்திரவதை செய்து கொன்றுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை (09.09.2021) இரவு தலிபான்களுக்கும் தேசிய எதிர்ப்பு முன்னணிக்கும் ஏற்பட்ட மோதலில், அவரை தலிபான்கள் சித்திரவதை செய்து கொலை செய்துள்ளனர். ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் இதனை தெரிவித்துள்ள ரோஹுல்லா சலேவின் உறவினர் எபதுல்லா, ரோஹுல்லா சலேவின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்காமல், அவரது உடல் அழுக வேண்டும் என தலிபான்கள் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 1996ஆம் ஆண்டு அம்ருல்லா சலேவின் சகோதரியை தலிபான்கள் சித்திரவதை செய்து கொன்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.