அமெரிக்க வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையின் செய்தியாளரை உளவு பார்த்த குற்றத்துக்காக கைது செய்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய உளவுப் பிரிவு காவல்துறையினர் தெரிவித்ததாவது, இவான் கார்ஸ்கோவிச் என்ற அமெரிக்கப் பத்திரிகையாளர் சில ரகசியத் தகவல்களைச் சேகரிக்க முயன்றதாக யூரல் மலைப்பகுதியின் யெகாடரின்பர்க் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார் எனக் கூறியுள்ளனர். மேலும் அமெரிக்க அரசின் உத்தரவின் பேரிலேயே ரஷ்யாவில் உளவு பார்க்கும் செயலில் ஈடுபட்டு வந்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால், இவான் கார்ஸ்கோவிச் உக்ரைன் - ரஷ்யா போர் குறித்து விவரங்களைச் சேகரிப்பதற்காக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையால் அனுப்பப்பட்டவர் என்றும், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் வழங்கிய அடையாள அட்டை உள்ளது என்றும் கூறப்படுகிறது. இவான் என்றைக்கு கைது செய்யப்பட்டார் என்ற விவரம் கூறப்படாத நிலையில் குற்றம் உறுதி செய்யப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படக்கூடும் எனக் கூறப்படுகிறது.