கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ப்ளாய்டின் மரணத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்விதமாக அமெரிக்காவெங்கும் நடைபெறும் போராட்டத்தின் காரணமாக, அமெரிக்க அதிபர் ட்ரம்பும் அவரது குடும்பமும் பதுங்கு குழியில் ஒளிந்திருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ஹூஸ்டன் நகரிலிருந்து பிழைப்புக்காக மின்னசோட்டா நகருக்கு வந்தவர் ப்ளாய்டு. அங்கு ஒரு கடையில் பொருள் வாங்கும்போது கள்ளநோட்டு கொடுத்ததாக போலீசார் அவரைக் கைதுசெய்ய முயன்றனர். அதற்கு ப்ளாய்டு எதிர்ப்புத் தெரிவிக்க, டெரக் என்னும் போலீஸ் அதிகாரி அவரைக் கைவிலங்கிட்டு தரையோடு அழுத்தி அவரது கழுத்தில் தன் கால்முட்டியை வைத்து அழுத்தினார். இதில் ப்ளாய்டு இறந்துபோனார்.
இதற்கு எதிர்ப்புத்தெரிவித்து அமெரிக்காவின் 140 நகரங்களில் கறுப்பினத்தவர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். பல இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக மாறி தீவைப்பு, கொள்ளையாகவும் மாறிவருகின்றன. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அமைந்துள்ள வாசிங்டன் டி.சி. நகரிலும் போராட்டம் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
இரவும் பகலும் வெள்ளை மாளிகைக்கு எதிராகப் போராட்டமும் சில இடங்களில் கார் மீது கல்வீச்சும் தீவைப்பும் நடைபெற்றதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் பதுங்கு குழிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.