
இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை தீவிரமாகி இருப்பதைப் போலவே, உலகின் பல்வேறு நாடுகளிலும் கரோனா பாதிப்பு மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனால் உலகின் பல்வேறு நாடுகளும் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்தநிலையில், துருக்கியில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியில் தினசரி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனையடுத்து அங்கு, வரும் 29ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. தினசரி கரோனா பாதிப்பை 5 ஆயிரத்திற்கு கீழ் கொண்டுவரும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள துருக்கி, பொது போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இந்த ஊரடங்கில் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளிவர வேண்டும் என உத்தரவிட்டுள்ள துருக்கி, பள்ளிகளை மூடவும், வகுப்புகளை இணையத்தில் நடத்தவும் ஆணை பிறப்பித்துள்ளது. அதேநேரத்தில் அவசரகால பணிகளுக்கான பணியாளர்கள், உணவு உற்பத்தி துறையில் பணியாற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட சிலருக்கு மட்டும் இந்த ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு மே 17 வரை அமலில் இருக்கும்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு இரவுநேர ஊரடங்கையும், வார இறுதி நாட்களில் ஊரடங்கையும் துருக்கி அமல்படுத்திய நிலையில், அது பயனளிக்காததால், தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.