இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் புதிய வகை கரோனா வைரஸும் பரவி வருகிறது. இதனையடுத்து நியூசிலாந்து, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளன. இங்கிலாந்து நாடும், இந்தியர்கள் நேரடியாக தங்கள் நாட்டுக்கு வர முடியாதபடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ரஷ்யாவும் இந்தியர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியுள்ளது. இந்தநிலையில் சிங்கப்பூரும் இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்பவர்கள், அந்தநாட்டிலுள்ள தனிமைப்படுத்தும் மையங்களில் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்ற விதி ஏற்கனவே அமலில் உள்ளது. இந்தநிலையில் வரும் 22 ஆம் தேதி இரவு 11.59 மணிமுதல், இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வருபவர்கள் 14 நாட்கள் மையங்களில் தனிமையில் இருப்பதுடன், மேற்கொண்டு ஏழுநாட்கள் தங்களது வீட்டிலும் தனிமையில் இருக்கவேண்டும் என சிங்கப்பூர் அரசு புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது.
இந்த கட்டுப்பாடு, தற்போது தனிமைப்படுத்தும் மையங்களில் இருப்பவர்களுக்கும் பொருத்தும் எனவும் சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு மையங்களில் தனிமையில் உள்ளவர்களுக்கு 14 நாட்களுக்கு பின்னர் கரோனா பரிசோதனை நடத்தப்படும் என தெரிவித்துள்ள சிங்கப்பூர் அரசு, ஏழு நாட்கள் வீட்டு தனிமை முடிந்த பிறகு மீண்டும் கரோனா பரிசோதனை நடத்தப்படும் எனவும் கூறியுள்ளது.
இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டிற்கு கட்டுமானம் உள்ளிட்ட பணிகளுக்கு வரும் தொழிலாளர்கள் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவது தொடரும் என சிங்கப்பூர் அறிவித்துள்ளது.