சவுதி அரேபியாவில் தேவையற்ற மாற்றங்களை ஏற்படுத்தக் கூடாது என சவுதி இளவரசருக்கு அல்-கொய்தா மிரட்டல் விடுத்துள்ளது.
சவுதி அரேபியாவின் இளவரசராக முகமது பின் சல்மான் சில மாதங்களுக்கு முன்னர் பொறுப்பேற்றார். அவரது ஆட்சியில் சில முக்கிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. நீண்டகாலமாக பெண்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையான வாகனம் ஓட்டும் அனுமதி, விளையாட்டு மைதானங்களுக்கு செல்ல அனுமதி என அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டார். அதேபோல், பெண்கள் பர்தா அணிவது அவரவர் விருப்பம் எனக் கூறிய அவர், முன்னோர்கள் அதையே வலியுறுத்தி உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். அதுமட்டுமின்றி, மேற்கத்தியக் கலாச்சாரங்களை முன்னெடுக்கும் கேலிக்கை நகரம், திரையரங்குகள் என பலவற்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், முகமது பின் சல்மானின் இந்த நடவடிக்கைகள் யாருக்கும் பயன் தராது என அல்கொய்தா-தீவிரவாத அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள மிரட்டல் அறிவிப்பில், இளவரசர் செய்வது கொஞ்சம் கூட சரியில்லை. பெண்களுக்குத் தேவையில்லாத சுதந்திரங்களை அவர் வழங்கிவருகிறார். மிகவும் கட்டுப்பாடான இஸ்லாமிய நாட்டில், மேற்கத்திய கலாச்சாரத்தை புகுத்தி நாசம் செய்கிறார். இனியும் அவர் இதைத் தொடர்ந்தால் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ளது.