பாகிஸ்தானில் தென்மேற்கு பகுதியில் பலுசிஸ்தான் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தையொட்டி, ஈரான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய எல்லைகளை பகிர்ந்து வருகின்றன. இந்த நிலையில், பலுசிஸ்தான் பகுதியில் ஈரான் - பாகிஸ்தான் எல்லையையொட்டி 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ள குஹிசாப் நகரை குறிவைத்து கடந்த 16ஆம் தேதி ஈரான் ராணுவத்தின் சிறப்பு படையினர் ஏவுகணைகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் வீடுகள் பல தரைமட்டமாகி, கட்டடங்கள் பல இடிந்தும் விழுந்தன. மேலும், இந்த சரமாரி தாக்குதலில், கட்டட இடிபாடுகளில் சிக்கி குழந்தைகள் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாக கூறப்பட்டது.
இந்த திடீர் தாக்குதல் குறித்து ஈரான் செய்தி நிறுவனம் ஒளிபரப்பியதாவது, ‘பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-அல்-அட்ல் என்னும் பயங்கரவாத இயக்கத்தினர் அமைத்திருந்த போர்த்தளங்கள், முகாம்கள் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டது எனவும், இதில் 2 பயங்கரவாத முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டது’ என்றும் தெரிவித்தது.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்தது. இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘நாட்டின் வான்வெளியில் ஈரான் அத்துமீறி நுழைந்து தாக்கியுள்ளது. எந்தவித முன் அறிவிப்பும் இன்றி நடத்தப்பட்ட ஈரானின் இந்த தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த தாக்குதலுக்கு உரிய விலை கொடுக்க வேண்டும்’ என்று கூறி எச்சரித்தது. இதனால், இருநாடுகளுக்கும் இடையே எல்லையில் பதற்றம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்பு மீதான தாக்குதலில் ஈரானுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்திருந்தது. இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்லால் கூறுகையில், “இது ஈரானுக்கும்-பாகிஸ்தானுக்கு இடையிலான விவகாரம். ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ள முடியாது என்ற சமரசமற்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளது. தங்களது தற்காப்புக்காக நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் புரிந்து கொள்கிறோம்” என்று கூறினார்.
இந்த நிலையில், ஈரான் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்துள்ளது. ஈரான் - பாகிஸ்தான் எல்லையில் ஈரானில் இருந்து செயல்படும், இரண்டு பலூச் பிரிவினைவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய ட்ரோன், ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 பேர் ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.