தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் பல்வேறு முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. இதற்காக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு முன்னெடுப்புகளையும் எடுத்து வருகிறது. அந்த வகையில் அண்மையில் சென்னையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் சுமார் ரூ. 6 லட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 27 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்பட்டது.
மாநாட்டைத் தொடர்ந்து வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின், அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு 8 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் என்ற பிரபல நாளிதழ், தமிழ்நாடு தொழில்துறையில் முன்னிலை வைத்து வருவதாக பாராட்டி கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த கட்டுரையில், ‘எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் உற்பத்தியை, இந்தியாவில் அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக மத்திய அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு நாடு முழுவதும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்திக்கு மானியம் வழங்க ஆரம்பித்தது. இதனால் நொய்டா உள்ளிட்ட சில இடங்களில் புதிய தொழிற்சாலைகள் உருவாகின. ஆனால், தமிழ்நாட்டிலோ மின்னணு தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படுவதற்கு சலுகைகள் காரணமாக அமையவில்லை.
போக்குவரத்து வசதி, ஏராளமான பட்டதாரிகள், சிறந்த கல்வி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் தமிழ்நாட்டில் உள்ளதால் அங்கு எலக்ட்ரானிக்ஸ் தொழில்கள் ஈர்த்துள்ளன. நீண்ட காலமாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தியில் தைவானைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தான் முக்கிய பங்கு வகித்து வருகிறது. ஆனால், ஐபோன் தயாரிப்பு மையமாக தமிழ்நாடு உருவாகி வருகிறது. 18,720 தொழிலாளர்கள் தங்கும் வசதி கொண்ட இரும்பு பிரம்மாண்ட குடியிருப்புகள் ஸ்ரீபெரும்புதூரில் கட்டப்பட்டு வருகின்றன. சீனாவில் ஐபோன் தயாரிக்கப்பட்டு வந்த ஷெஞ்ஜென், ஜென்ஜவ் நகரங்களை போன்று ஸ்ரீபெரும்புதூர் காணப்படுகிறது. மொத்த ஐபோன் உற்பத்தியில் 13 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்படும் நிலையில் 75% தமிழ்நாட்டில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. அடுத்த ஆண்டே இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும்
இந்தியா முழுவதும் உள்ள உழைக்கும் பெண்களின் எண்ணிக்கையில், 43% பேர் தமிழ்நாட்டு மட்டுமே உள்ளனர். இந்திய மக்கள் தொகையில் 5%ஐ கொண்ட தமிழ்நாட்டில், நாட்டின் உழைக்கும் பெண்களின் எண்ணிக்கையில் 43% பேர் உள்ளனர். கார், உதிரிபாக ஆலைகள், ஃபவுண்டரி, பம்ப்செட் தயாரிப்பி, பின்னலாடை தயாரிப்பில் ஏற்கனவே தமிழ்நாடு தான் முன்னணி வைத்து வருகிறது. இந்தியாவின் தீப்பெட்டி தயாரிப்பில் தமிழ்நாட்டின் சிவகாசி முன்னணியில் உள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில்கள் செழித்து வளர்ந்துள்ளதே தொழில்துறையில் தமிழ்நாடு வெற்றி பெற காரணம்’ என்று குறிப்பிட்டுள்ளது.