ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே பெண்களுக்கு எதிரான சட்டங்களை அறிவித்து வருகிறது. பெண்கள் படிக்கக்கூடாது; கட்டாயம் புர்கா அணிய வேண்டும்; ஆண்கள் முகத்தில் தாடி வைத்துக்கொள்ள வேண்டும் எனப் பல்வேறு பழமைவாதச் சட்டங்களையும் அமல்படுத்தியுள்ளது. இதனால் தொடர்ந்து பெண்களின் சுதந்திரம் பாதிக்கப்படுவதால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில் கட்டாய திருமணத்தில் இருந்து பெண்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் என தலிபான் அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் நாட்டின் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுன்சாடா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தலிபான் ஆட்சியில் கட்டாய திருமணம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளில் இருந்து பெண்கள் காப்பாற்றப்பட்டு உள்ளனர் என்றும், மேலும் பெண்கள் வசதியான மற்றும் வளமான வாழ்க்கையைப் பெறத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.