ஆப்கானிஸ்தான் நாட்டில், தாலிபன்கள் தொடர்ந்து முன்னேறிவருகின்றனர். நேற்று (13.08.2021) மட்டும் அவர்கள், 4 மாகாண தலைநகரங்களைக் கைப்பற்றியுள்ளனர். இதன்மூலம் நாட்டிலுள்ள 34 மாகாண தலைநகரங்களில், பாதியைத் தாலிபன்கள் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புல்-இ-ஆலம் என்ற மாகாண தலைநகரைக் கைப்பற்றியுள்ள தாலிபன்கள் தொடர்ந்து முன்னேறிவருகின்றனர். தற்போது அவர்கள், காபூலில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளனர்.
ஏற்கனவே தாலிபன்கள் 30 நாட்களில் காபூலைக் கைப்பற்றுவார்கள் என அமெரிக்கா கணித்துள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே காபூல் தாலிபன் கைகளுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த வருட தொடக்கத்திலிருந்து லட்சக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள், அகதிகளாக வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்துவருகின்றனர்.
இந்தநிலையில் கனடா நாடு, தாலிபன்களால் எளிதாகப் பாதிப்புக்குள்ளாகும் அபாயத்தில் உள்ள 20 ஆயிரம் ஆப்கன் குடிமக்களுக்கு அடைக்கலம் தந்து, மீள்குடியேற்றம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.