ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே தலிபான்கள், அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்குவதாக அறிவித்தனர்.
மேலும், அண்மையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், தாங்கள் யாரையும் பழி வாங்க மாட்டோம் எனவும் தெரிவித்திருந்தனர். ஆனால், உலகளாவிய பகுப்பாய்வுகளுக்கான ரிப்டோ நார்வேஜியன் மையம், ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பிய அறிக்கையின் மூலம், முக்கிய அரசு பொறுப்புகளில் இருந்தவர்களைத் தலிபான்கள் தீவிரமாக வேட்டையாடிவருவது தெரியவந்துள்ளது.
உலகளாவிய பகுப்பாய்வுகளுக்கான ரிப்டோ நார்வேஜியன் மையத்தின் அறிக்கையில், முன்பிருந்த ஆப்கன் அரசில் பணியாற்றியவர்களையும், அந்த அரசுடன் இணைந்து செயலாற்றியவர்களையும் வேட்டையாடுவதைத் தலிபான்கள் தீவிரப்படுத்தியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை அந்த நபர்கள் கிடைக்கவில்லையென்றால், அவர்களது குடும்பத்தினரை தலிபான்கள், ஷரியா சட்டப்படி தண்டித்துவருவதாக அந்த அறிக்கை கூறுகிறது.
குறிப்பாக இராணுவம், காவல்துறை, உளவு நிறுவனம் ஆகியவற்றில் பணியாற்றிய அதிகாரிகள் ஆபத்தில் இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. உலகளாவிய பகுப்பாய்வுகளுக்கான ரிப்டோ நார்வேஜியன் மையம் என்பது ஐக்கிய நாடுகள் சபைக்காக உளவு அறிக்கைகளைத் தயார் செய்யும் தனியார் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.