சீனாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. இதற்கு டெல்டா வகை கரோனாவே காரணமாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் கரோனா வைரஸ் முதன்முதலில் பரவிய வுஹானில், வெளிநாட்டிற்குச் செல்லாத, வெளிநாட்டிற்குச் சென்று வந்தவர்களுடன் தொடர்பில் இல்லாத ஏழு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
2020 ஆம் ஆண்டின் தொடக்கத்திற்கு பிறகு, வுஹானில் வெளிநாட்டிற்குச் செல்லாத, வெளிநாட்டிற்குச் சென்று வந்தவர்களுடன் தொடர்பில் இல்லாதவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும். இதனையடுத்து வுஹான் நகரில் உள்ள அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய அந்த மாகாண நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
வுஹானில் உள்ள ஒரு கோடி மக்களுக்கும் விரைவாக கரோனா பரிசோதனை நடத்தப்படும் என வுஹான் அதிகாரி லி தாவோ தெரிவித்துள்ளார். ஏற்கனவே சீனா கரோனா பாதிப்பு கண்டறியப்படும் நகரங்களில், மக்களை வீட்டிற்குள்ளேயே முடக்கி கரோனா பரிசோதனை செய்து வருகிறது. அந்த நகரங்களில் உள்ளூர் போக்குவரத்து தொடர்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதேபோல சீனாவின் யாங்சோ நகரிலும் கரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. அந்தநகரின் 13 லட்சம் மக்கள் தற்போது வீட்டிற்குள் முடக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்குள்ளாகப்பட்டு வருகின்றனர். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு ஒருவர் மட்டும் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.