உக்ரைன் தலைநகர் கீவ் விமான நிலையத்தைக் குறி வைத்து ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. கீவ் விமான நிலையம் மற்றும் ராணுவ தளங்களை ஏவுகணைகள் மூலம் தொடர்ந்து தாக்கி வருகிறது ரஷ்ய படை.
இந்த நிலையில், ரஷ்ய படைகளுக்கு பதிலடிக் கொடுத்து வரும் உக்ரைன் படையினர், ரஷ்யாவின் லுஹான்ஸ்க் நகரில் 5 போர் விமானங்களுடன், ரஷ்யாவின் ஹெலிகாப்டரையும் வீழ்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ரஷ்ய படைகளின் தாக்குதலில் 100- க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மெட்ரோ சுரங்கப்பாதையில் உக்ரைன் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது. எனினும், உக்ரைனில் போர் சூழலால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தலைநகர் கீவ் உள்ள இந்திய தூதரகம், "உக்ரைனில் உள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்; வீடு, ஓட்டல்கள் என எங்கு இருந்தாலும் அங்கேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும். கீவ் நகருக்கு சென்ற இந்தியர்கள் அங்கிருந்து திரும்பி செல்ல வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல், உக்ரைனில் உள்ள இந்தியர்களின் உதவிக்காக டெல்லியில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. உதவிக்கு 1800- 118- 797, 91 11 230121113, 91 11 23014104, 91 11 23017905 என்ற தொலைபேசி எண்களை அழைக்கலாம், உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தை +380 997300428, +380 997300483 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.