பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராகச் செயல்பட்டுவரும் மரியம் நவாஸின் கணவர் சப்தார் அவான் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமராக இருக்கும் இம்ரான் கான், ராணுவத்தின் கைப்பாவையாகச் செயல்படுவதாக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. எனவே, அவரை பதவி விலகக்கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அந்தவகையில், அந்நாட்டின் 11 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அண்மையில் லாகூரில் உள்ள குஜ்ரான்வாலாவில் பிரதமர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டன. இதனைத்தொடர்ந்து நேற்று கராச்சியில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக மாபெரும் பேரணியை நடத்தின இந்த எதிர்க்கட்சிகள்.
இந்தப் பேரணியில் பேசிய நவாஸ் ஷெரிஃபின் மகளும், முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சியின் துணைத் தலைவருமான மரியம் நவாஸ், "உங்களுக்கு (இம்ரான் கான்) மக்களிடம் அன்பைக் காட்டத் தெரியாவிட்டால், உங்களுக்கு அதனைக் கற்பிக்க யாரும் இல்லை என்றால், நீங்கள் நவாஸ் ஷெரீப்பிடமிருந்து கற்றுக் கொண்டிருக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரம் கரோனா தொற்றுக்கு முன்பே சரிந்துவிட்டது. இரட்டை இலக்க பணவீக்கம் மற்றும் எதிர்மறை வளர்ச்சியுடன் பாகிஸ்தான் போராடுகிறது" எனத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் அடுத்தடுத்த போராட்டங்களால் பாகிஸ்தான் அரசியலில் நிச்சயமற்ற சூழல் நிலவிவரும் நிலையில், மரியம் நவாஸின் கணவர் பாகிஸ்தான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மரியம் நவாஸின் கணவர் சப்தார் அவான் தங்கியிருந்த ஹோட்டலுக்குள் புகுந்த போலீஸார் அறைக் கதவை உடைத்து அவரை கைது செய்துள்ளனர்.