'தி.மு.க ஊழல் கட்சியா, அ.தி.மு.க ஊழல் கட்சியா என நேரில் விவாதிக்கத் தயாரா?' என்று அண்மையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க., எம்.பி ஆ.ராசா கூறியிருந்தார். அந்தச் செய்தியாளர் சந்திப்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும், தற்பொழுதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார் ஆ.ராசா.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, தி.மு.க தலைவர்களைக் கடுமையாகச் சாடி, ஒருமையில் பேசியிருந்தார். இதற்குக் கண்டனம் தெரிவித்து, விருதுநகரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உருவப் பொம்மையை எரித்து, தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், அ.தி.மு.க தலைவர்களை விமர்சித்ததற்காக, அ.தி.மு.க சார்பிலும் போராட்டம் நடத்தப்பட்டது. இதில், தி.மு.க - அ.தி.மு.க தொண்டர்களுக்கிடையே கைகலப்பும் ஏற்பட்டது.
இந்நிலையில், "நான் கோமாளி அல்ல. மு.க.ஸ்டாலின் தான் இந்தத் தேர்தலுக்குப் பின் ஏமாளியாகப் போகிறார். ஆ.ராசா தன் மீது அழுக்கை வைத்துக்கொண்டு எங்களை விமர்சனம் செய்யக்கூடாது. முதல்வர், துணை முதல்வரை யார் விமர்சித்தாலும் நான் பதிலடி கொடுப்பேன். எங்கள் இயக்கத்தின் தலைவர்களை மரியாதையாகப் பேசினால், நாங்களும் மரியாதையாக நடந்துகொள்ளவோம். தி.மு.க அழுகிப்போன தக்காளி. அது, கூட்டுக்கும் உதவாது, குழம்புக்கும் உதவாது" என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.