இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போரால் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். பதிலுக்கு ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு இதுவரை பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இதுவரை இந்தப் போரில் 150க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன் இருக்கும் வரை இந்த வேட்டை தொடரும் என எச்சரித்த இஸ்ரேல், அதிதீவிர தாக்குதலை நடத்திக்கொண்டே இருக்கிறது. சர்வதேச நாடுகள் இந்தப் போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் குண்டு சத்தங்களுடன் காசா நகர் எங்கும் மரண ஓலம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் இஸ்ரேலிய தாக்குதலில், காசாவில் இதுவரை 40,000 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து துருக்கி பாராளுமன்றத்தில் பேசிய பாலஸ்தீன அதிபர் மஹ்முத் அப்பாஸ், காசா செல்ல முடிவு எடுத்திருக்கிறேன்; காசாவில் இஸ்ரேலிய தாக்குதலைத் தடுப்பதே எனது நோக்கம். என்னுடன் ஐ.நா பொதுச் செயலாளர் மற்றும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் என்னுடன் காசாவிற்கு வரவேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.