இந்தியாவைப் போன்று நைஜீரியாவில் மேற்கொண்ட அதே நடவடிக்கையால் அந்நாட்டில் மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி இரவு 8 மணியளவில் தொலைக்காட்சிகளில் தோன்றிய பிரதமர் மோடி, நாட்டில் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் இனிமேல் செல்லாது என திடீரென அறிவித்திருந்தார். அதன் பெயர் டீமானிடைசேஷன் எனக் கூறப்பட்டது. மேலும், நாட்டில் உள்ள கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக இத்தகைய பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது எனக் கூறியிருந்தார். இது நாட்டு மக்களுக்கு பேரிடராக அமைந்தது எனக் கூறுவது தான் யதார்த்தம்.
இந்நிலையில், இந்திய அரசைப் பின்தொடர்ந்து நைஜீரியாவிலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக அந்நாட்டின் மத்திய வங்கி கடந்தாண்டு அக்டோபரில் அறிவித்திருந்தது. அதன்படி 200, 500 மற்றும் 1,000 நைரா நோட்டுகள் புழக்கத்தில் இருந்து அகற்றப்பட்டன. இந்த நோட்டுக்களை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள ஜனவரி 31ம் தேதியை கடைசி நாளாக அறிவித்த நிலையில் பிப்ரவரி 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால், அங்குள்ள வங்கிகளில் புதிய நைரா நோட்டுகள் போதுமான அளவில் இல்லாததால், நைஜீரியன் நாட்டு மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதே சமயம், வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை அந்நாட்டு வங்கிகள் விதித்துள்ளது. இதனால் கையில் பணம் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
ஒருகட்டத்தில் விரக்தியடைந்த நைஜீரியன் நாட்டு மக்கள், ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வங்கி கிளைகளையும் ஏடிஎம் மையங்களையும் அடித்து நொறுக்கிய பொதுமக்கள், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக அரசு அலுவலகங்கள், முக்கிய சாலைகளை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நைஜீரியா நாட்டில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
- சிவாஜி