தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் இரண்டாவது மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டமைப்பின் நிறுவன தலைவர் ஜெய்னுல் ஆபிதீன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் ஜெய்னுல் ஆபிதீன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “வரும் ஜனவரி 8ஆம் தேதி மாநில மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளது. ஹிஜாப் விவகாரத்தில் அரசியல் சாசனத்திற்கு எதிரான தீர்ப்பை வழங்கிய உயர் நீதிமன்றத்தை வன்மையாக கண்டிக்கிறோம். முஸ்லிம்களின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு வழங்கப்பட்டுள்ள 3.5 சதவிகித தனி இட ஒதுக்கீடு, தமிழ்நாட்டின் முஸ்லீம் சமுதாய மக்கள் தொகையோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும். எனவே, தமிழக முஸ்லிம்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அதை 7 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டும்.
1947ஆம் ஆண்டுக்கு முன் எந்த நிலையில் பள்ளிவாசல்கள், கோவில்கள் இருந்ததோ அதே நிலையில் நீடிக்க வேண்டும் என்று 1991ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. தற்போது அதை மீறும் வகையில் ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் சிலை உள்ளது என ஒரு கும்பல் மத பதற்றத்தை உண்டாக்கி வருகின்றன. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இது போன்ற மத பதற்றங்கள் நீடித்தால் இந்தியாவில் தொழில் செய்ய யாரும் வரமாட்டார்கள். இலங்கையை போல இந்தியாவின் பொருளாதாரமும் அதல பாதாளத்திற்கு சென்று விடும்” என்று தெரிவித்தார்.