அமர்க்களமாக புத்தாண்டு பொங்கல் திருநாளை கொண்டாட வேண்டிய நெல்லையை சோகத்தில் தள்ளியிருக்கிறது காந்திமதி யானையின் மரணம்.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றானது நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயில். அன்றாடம் ஆலயம் திரண்டு வருகிற பக்தர்களால் நிரம்பி வழிகிற பேராலயம். இந்த ஆலயத்திற்கு 1985-ன் போது வந்து சேர்ந்த யானைக்கு ஆலயத்தின் அன்னை காந்திமதியம்மனின் பெயரையே சூட்டியதோடு அன்போடும் பாசத்தோடும் அதனிடம் பக்தர்கள் பழகி வந்திருக்கிறார்கள். நெல்லை வாசிகளின் ரத்தமும் சதையுமாகவே மாறிப் போனது யானை காந்திமதி. சுமார் 40 வருடங்களாக திருக்கோயிலின் பணிகளில் வலம் வருகிறது.
ஆனித் தேரோட்டமானாலும், ஆலய விசேஷங்கள் அம்பாளின் சப்பர ஊர்வலமானலும் சரி, சர்வ அலங்கார அம்பாரி அலங்காரத்துடன் ராஜ கம்பீரத்துடன் நடைபோட்டு ரதவீதிகளில் முன்னே வருவது தனிச்சிறப்பு.
நெல்லையப்பர் ஆலயத்தின் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகத்திற்காக தாமிரபரணி நதியின் குறுக்குத்துறை பகுதியில் இருந்து தீர்த்தம் எடுத்து வருவது, அதிகாலையில் ஆலையத்தில் நடைபெறுகின்ற திருவனந்தல் மற்றும் கஜ பூஜையில் பங்கேற்பது யானை காந்திமதியின் வழக்கம்.
தற்போது 56 வயதை நெருங்கியிருக்கிற யானை காந்திமதியின் எடை அதிகரித்திருக்கிறது. வயது முதிர்வின் காரணமாக அண்மைக் காலங்களில் பலவீனப்பட்டு வருவதுடன் பின்கால்கள் நடப்பதற்கே தற்போது மிகவும் சிரமப்பட்டு வந்திருக்கிறது.
நான்கு வருடங்களாக யானைக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு பராமரிப்பில் இருந்திருக்கிறது. தற்போது யானை காந்திமதி நடப்பதற்கு சிரமப்பட்ட நிலையில் நெல்லை கால்நடை பன்முக மருத்துமனையின் மருத்துவர்கள், மாவட்ட வன அலுவலக மருத்துவர்கள் மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி வல்லுநர்களின் குழு என்று மொத்தக் குழுவினரும் யானையை பரிசோதனை செய்து கடந்த இரண்டு மாதங்களாகவே தொடர் சிகிச்சையை மேற்கொண்டிருக்கிறார்கள். தவிர யானை காந்திமதியும் ஓய்வில் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு யானை காந்திமதியால் எழுந்து நிற்க முடியாத நிலை ஏற்படவே அறநிலையத்துறை அதிகாரிகள், வனச்சரகர் மற்றும் கால்நடைத்துறை இணை இயக்குனர் ரிச்சர்ட்ராஜ் அறிவுறுத்தலின் பேரில் ஸ்ரீபுரம் கால்நடை மருத்துவமனை முதன்மை மருத்துவர் முருகன், டாக்டர் செல்ல மாரியப்பன், கால்நடை மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் மாதேஷ் அடங்கிய மருத்துவக் குழுவினர் யானையைப் பரிசோதனை செய்திருக்கிறார்கள். அதனடிப்படையில் குழுவினரின் பரிந்துரைப்படி க்ரேன் முலம் தூக்கி நிறுத்தப்பட்டும் யானையால் தொடர்ந்து நிற்க முடியாத நிலை. வயது மூப்பு, உடல் பலவீனம் காரணமாக மீண்டும் யானை படுத்துக் கொண்டது.
இதனிடையே தொடர் சிகிச்சை பலனின்றி யானை காந்திமதி ஜன 12 அன்று காலையில் உயிரிழந்தது. தகவல் நெருப்பாய் பரவிய கணம் திரண்டு வந்த பக்தர்கள், யானையின் பாகன்கள், சிவனடியார்கள் கண்ணீர் விட்டுக் கதறி இருக்கிறார்கள். தொடர்ந்து மக்கள் இறுதி அஞ்சலி செலுத்த, ஆலயம் சார்பில் யானை காந்திமதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இறுதியாத்திரைக்காக லாரியில் ஏற்றப்பட்டது. யானை காந்திமதியின் இறுதி ஊர்வலம் செல்கிற வழி நெடுகிலும் பக்தர்கள் சோகத்துடன் மலர்களைத் தூவினர். ஊர்வலத்தில் பொதுமக்கள் கண்ணீருடன் திரண்டிருந்தது கனத்த சோகம். ஆய்விற்காக நெல்லை வந்திருந்த அமைச்சர் கே.என்.நேரு யானை காந்திமதிக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
டவுண் ஆர்ச் பகுதியிலிருக்கிற நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமான தாமரைக் குளத்தில் ஆகம மரபுகளின்படி யானை காந்திமதி நல்லடக்கம் செய்யப்பட்ட போது திரளமான பக்தர்கள் கண்ணீர் மல்க யானை காந்திமதிக்கு பிரியாவிடை கொடுத்தனர். நெல்லையப்பர் கோயில் சுவாமி, அம்பாள் அபிஷேகத்திற்கு யானை காந்திமதி குறுக்குத்துறையின் தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்துக் கொண்டு வருகிற வழியில் ஆலயம் வரை நெடுக பாதாளச் சாக்கடைக்காகத் தோண்டப்பட்ட மேடு பள்ளங்கள் சாக்கடைத் திட்டம் நிறைவேறாமல் கிடப்பிலிருந்ததால் அவைகள் அப்படியே பல வருடங்களாக இருந்திருக்கிறது.
இந்த மேடு பள்ளங்களில் தான் யானை காந்திமதி நடக்க முடியாமல் அன்றாடம் தீர்த்தம் கொண்டு வந்ததால் கால்கள் பலவீனப்பட்டு நடப்பதற்கு சிரமப்பட்டிருக்கிறது. இந்தப் பள்ளம், மேடுகள் சரி செய்யப்பட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காது என ஆதங்கப்படுகின்றனர் பக்தர்கள்.
1985-ன் போது காந்திமதியம்மன் ஆலயத்திற்கு நெல்லை டவுண் பகுதியில் வியாபார நிறுவனத்தைக் கொண்டவரும் சிறந்த சிவபக்தருமான நயினார் பிள்ளை என்பவர் இந்த யானையை வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்று சொல்கிற பக்தர்கள், அண்மையில் உச்சநீதிமன்றம் யானைகளை வனவிலங்குகள் பட்டியலில் சேர்த்ததால் இனிவரும் காலங்களில் ஆலயங்களுக்கு அடையாளமாக யானைகளை வாங்க முடியாத சூழல். அதன் காரணமாகவே புகழ் பெற்ற பழனி, திருவண்ணாமலை போன்ற ஆலயங்கள் யானைகளில்லாமல் இருக்கிறன்றன என்கிறார்கள்.