
திருப்போரூர் அருகே கோவில் குளத்தில் குளித்த மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் சாத்தான்குப்பம் பஜனைகோவில் தெருவை சேர்ந்தவர்கள் விஜய், உதயகுமார் மற்றும் முகேஷ். கல்லூரி மாணவர்களான மூவரும் திருப்போரூர் சிதம்பரசாமி கோவில் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.
குளத்தில் குளித்துக்கொண்டு இருந்தபொழுது எதிர்பாராத விதமாக முகேஷ் மற்றும் உதயகுமார் நீரில் மூழ்கி தத்தளித்ததால், அவர்களைக் காப்பாற்ற அவர்கள் அருகில் விஜய் சென்றுள்ளார். தனி ஒருவராக அவர்களை மீட்டுக் கொண்டு வர கஷ்டப்பட்ட விஜய் எதிர்பாராத விதமாக தானும் நீரில் மூழ்கியுள்ளார்.
மூன்று நண்பர்களையும் காப்பாற்ற கிராம மக்கள் முயற்சி செய்தும் பலனளிக்காத நிலையில் மூன்று நண்பர்களும் நீரில் மூழ்கி இறந்துவிட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் உடல்களை தேடி மூவரது உடல்களையும் மீட்டனர். அவர்களின் உடல்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது.
துக்கம் தாளாது மூன்று நண்பர்களின் குடும்பத்தினரும் கதறி அழுத காட்சி அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.