தி.மு.க. நடத்தும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தைக் கண்டு அ.தி.மு.க.வுக்கு பயம் உள்ளது என தி.மு.க.வின் பொருளாளரும், அக்கட்சியின் மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தி.மு.க. தேர்தல் அறிக்கை குறித்த கருத்துக் கேட்பு கூட்டம் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களான திருச்சி சிவா எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., அந்தியூர் செல்வராஜ் எம்.பி., ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
அப்போது, தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினரிடம் வர்த்தகர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்கங்கள், விவசாயச் சங்கங்கள், ரியல் எஸ்டேட் சங்கங்கள் என அனைத்துத் தரப்பினரும் தங்களது கருத்துகளை மனுவாக வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டி.ஆர். பாலு, "கிராமங்கள்தோறும் தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடக்கிறது. இந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தைக் கண்டு அ.தி.மு.க.வினர் பயப்படுகின்றனர். 10 ஆண்டுகள் ஆட்சிசெய்த அ.தி.மு.க. உருப்படியாக ஒரு திட்டத்தையும் செய்யவில்லை. எல்லாம் பேப்பர் அளவில்தான் உள்ளது. அதனால், வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் முதல்வராக வர இருக்கிறார். அதைத்தான் மக்களும் விரும்புகிறார்கள்" என்றார்.