தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது திமுக ஆட்சி அமைத்ததும், கரோனா கட்டுபாடுகளால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் பொது மக்களின் நிலையினைக் கருத்தில்கொண்டு குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா 4 ஆயிரம் வழங்கப்படும் என்று மு.க. ஸ்டாலின் கூறினாா். இந்த நிலையில், திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின், தான் பொறுப்பேற்ற அன்று, 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொடுத்த வாக்குறுதியின்படி ரூ. 4,000இல் முதற்கட்டமாக ரூ. 2000, 15.5.2021 முதல் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இதில், குமாி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்க நியாயவிலைக் கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மகளிர் சுய உதவிக் குழு, பனைவெல்லம் கூட்டுறவு சங்கம், மீனவர் கூட்டுறவு சங்கம் ஆகியவற்றின் கீழ் இயங்கும் 776 நியாயவிலைக் கடைகளில், மொத்தமுள்ள 5,51,298 குடும்ப அட்டைதாரா்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட உள்ளது. இதற்காக முதற்கட்ட நிதியாக 110 கோடியே 26 லட்சம் வழங்கப்படவுள்ளது.
இதையொட்டி இன்று (15.05.2021) காலையில் இருந்து தினமும் 200 பேருக்கு வழங்கும் விதமாக டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. அந்தக் குடும்ப அட்டைதாரா்களாகிய ஆண்களும் பெண்களும் முதியோா்களும் காலையில் அந்தந்த ரேஷன் கடைகளில் கரோனா கட்டுப்பாடு விதிமுறைகளைப் பின்பற்றி, வாிசையில் இடைவெளிவிட்டு நின்று, காலை 8 மணிமுதல் மதியம் 12 மணிவரை முதற்கட்ட கரோனா நிவாரண நிதியான 2 ஆயிரம் ரூபாயை வாங்கிச் சென்றனர். அதேபோல் குமரி மாவட்டத்தில் காலை பெய்த கன மழைக்கு மத்தியிலும் ரேஷன் கடைகள் பரபரப்பாக காணப்பட்டன.