முன்னாள் மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் கடந்த ஜூன் 26ஆம் தேதி கைது செய்யப்பட்ட போலி ஆன்மீகவாதி சிவசங்கர் பாபா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பாகத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், பள்ளியில் உள்ள சொகுசு அறைக்கு நேராக அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில், ஆபாசமாகப் பேச பயன்படுத்திய பள்ளியின் மெயில் ஐடி, பென் ட்ரைவ், சிடிக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. சிவசங்கர் பாபாவின் கைரேகை பதிவை வைத்து அவர் பயன்படுத்திவந்த ரகசிய அறையைத் திறந்து சோதனையிட சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது. அண்மையில் ஜாமீன் கோரி சிவசங்கர் பாபா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதற்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், போலி சாமியார் சிவசங்கர் பாபா மீது மேலும் இரண்டு போக்சோ வழக்குகளை சிபிசிஐடி போலீசார் பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே நான்கு போக்சோ வழக்குகள் அவர் மீது போடப்பட்டு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.