தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் சிலர் பட்டாசு வெடித்துக்கொண்டே வீலிங் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
திருச்சி மாவட்டம், சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளிவிடை சிறுமருதூர் தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் சிலர் தங்களது இருசக்கர வாகனத்தின் முன்புறம் தீபாவளி பட்டாசுகளைக் கட்டிக்கொண்டு கடந்த 9 ஆம் தேதி இரவு சாலைகளில் அதிவேகத்தில் வீலிங் செய்து பட்டாசுகளை வெடித்து சாகசம் செய்தனர். மேலும், இது தொடர்பான காட்சிகளைத் தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, திருச்சி மாவட்டக் காவல்துறையினர் சாகசம் செய்த இளைஞர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வந்தனர்.
அந்த நடவடிக்கையில், இது தொடர்பான வீடியோக்களை ஆய்வு செய்ததில் திருச்சி மாவட்டம் புத்தூர் கல்லாங்காட்டைச் சேர்ந்த அஜய் என்பவர்தான் சாகசம் செய்தது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அஜய்யை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், வேறு சில இருசக்கர வாகனத்தின் முன்புறம் பட்டாசுகளைக் கட்டிக்கொண்டு சாகசம் செய்தவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், கம்பரசம்பேட்டையைச் சேர்ந்த பர்ஷத் அலி (21), ஊட்டத்தூர் பகுதியைச் சேர்ந்த அஜித் (22) என்பது காவல்துறையினருக்குத் தெரிய வந்தது.
இது சம்பந்தமாக சமயபுரம் காவல்துறையினர் அஜய், மணிகண்டன் மற்றும் சிலர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மணிகண்டன், பர்ஷத் அலி, அஜித் ஆகியோரை கைது செய்தும், அவர்களின் இரு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இன்னும் சிலரைக் கைது செய்யத் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.