![Youth passed away case viluppuram court verdict life sentence to two](http://image.nakkheeran.in/cdn/farfuture/2Hl2hvBY0hC5jeuhIhlkBIdRnfEAqZVFIqm3o1Dn_qU/1657870406/sites/default/files/inline-images/rh_4.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள கூத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணா மூர்த்தி(25). அதே ஊரைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(36).
கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது கூத்தனூர் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்களை ஆதரித்து இருவரும் தனித்தனியே பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில், அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதும் இவர்களுக்குள் பிரச்சனை எழுந்துள்ளது. இதன் காரணமாக அவர்களுக்குள் அவ்வப்பொழுது தகராறுகளும் நடந்துவந்துள்ளன.
இந்த நிலையில் கடந்த 24/4/2014 அன்று கூத்தனூர் ஆஞ்சநேயர் கோயில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பந்தமாக எலவாச நூர்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர் நாகலிங்கம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அந்தத் தீர்ப்பில், வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர் நாகலிங்கம் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், இவருக்கும் தலா பத்தாயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. தண்டனை விதிக்கப்பட்ட இருவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.