![Youngster passed away police investigation](http://image.nakkheeran.in/cdn/farfuture/V7BK5YiOWffC9lzunJDtN3AbnNX8eDgWhgJ1ZfTaEok/1653544624/sites/default/files/inline-images/hand-in_202.jpg)
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகில் உள்ள காட்டுப் பூஞ்சை கிராமத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி அர்ஜுனன்(40). இவரது முதல் மனைவி இறந்த நிலையில், அவர் சில ஆண்டுகளுக்கு முன்பாக இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். தற்போது இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில், அர்ஜுனன் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து சந்தேகத்தின் பேரில் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த அர்ஜுனனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவியுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போதே ஒருகட்டத்தில் அர்ஜுனன் தடுமாறிக் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அவர் போதையில் மயங்கி கிடப்பதாக கருதி அவரது மனைவியும் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார்.
பின்னர் நேற்று காலை எழுந்து பார்த்தபோது அர்ஜுனன் இரவு விழுந்து கிடந்த நிலையிலேயே அசைவில்லாமல் கிடந்துள்ளார். அவரை எழுப்பி பார்த்தபோது அவரிடம் எந்த அசைவும் தென்படவில்லை. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது அர்ஜுனன் இறந்து கிடப்பது தெரியவந்தது. உடனடியாக இது குறித்த தகவலை ஒலக்கூர் காவல் நிலையத்திற்கு தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர், அர்ஜுனன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அர்ஜுனன் தானாக தவறி விழுந்து இறந்தாரா இல்லை அடித்துக் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.