வேலூர் மாவட்டம் லத்தேரி பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் வாணியம்பாடி அருகே வெள்ளக்குட்டை கிராமத்தில் நடந்த எருதுவிடும் திருவிழாவில் தன்னுடைய காளையை லாரியில் கொண்டு வந்து போட்டியில் பங்கேற்கவைத்தார். பின்னர் காளையை மீண்டும் லாரியில் ஏற்றி வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார். அந்த லாரியோடு லத்தேரி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் இருபதுக்கும் மேற்பட்டோர் லாரியில் பயணம் செய்தனர்.
அப்போது லாரி ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தபோது, லாரியின் முன்பக்கத்தின் இரு சக்கரங்கள் கழண்டு ஓடியதால் ஓட்டுனரின் கட்டுபாட்டை இழுந்து லாரி விபத்துக்குள்ளானது. இதில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் தாலுக்கா போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் லத்தேரி அடுத்த தரமணி பகுதியை சேர்ந்த பிரித்திவிராஜ் மற்றும் அருண் ஆகியோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிர்ழந்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.