ஐதராபாத் பிரியாணிக்கு அடுத்து பெயர் பெற்றது ஆம்பூர், வாணியம்பாடி பிரியாணி. இந்த வகை பிரியாணிக்கான வாடிக்கையாளர்கள் இந்தியா முழுவதும் உள்ளனர். இவர்கள் வார இறுதி நாட்களில் வாணியம்பாடி அல்லது ஆம்பூர் வந்து பிரியாணி சாப்பிட்டுவிட்டு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அப்படித்தான் வாணியம்பாடியில் பிரியாணி சாப்பிட 450 கி.மீ ஒரு குழு பயணம் செய்துள்ளது .
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் பிரபலமான பிரியாணி ஹோட்டல் என்ற பேரில் அசைவ உணவகங்கள் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் தயாராகும் பிரியாணி சாப்பிட சென்னை, வேலூர், கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூர், தருமபுரி என பல பகுதிகளில் இருந்து ஆறு தேசிய நெடுஞ்சாலையில் பயணம் மேற்கொள்ளும் போது, வாணியம்பாடி ஹோட்டலுக்கு வருகை தந்து பிரியாணி சாப்பிட்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த வாரம் இறுதியில் டபள்யூ.சி.சி.ஜி (WCCG)என்ற அமைப்பை சேர்ந்த 12 பேர் சென்னையில் இருந்து சைக்கிளில் பயணம் செய்து வாணியம்பாடிக்கு வருகை தந்து பேருந்து நிலையம் அருகில் உள்ள, அந்த உணவகத்தில் பிரியாணி மற்றும் அசைவ உணவுகளை சாப்பிட்டு விட்டு மீண்டும் சைக்கிளில் சென்னை திரும்பி சென்றுள்ளனர்.
வாணியம்பாடியில் பிரியாணி சாப்பிட 450 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணம் செய்த குழுவினருக்கு ஹோட்டல் உரிமையாளர் ஜீஷான் நன்றி தெரிவித்தார்.