இந்திய நாட்டில் சுதந்திரப் போரட்ட காலகட்டத்தில் கவிதையின் மூலம் மிகப்பெரிய பெரும் போராட்டத் தீயையே ஏற்படுத்தியவர் மகாகவி பாரதியார். அவரது கவிதைகள் காலம் கடந்தும் பேசக் கூடியவை. மகாகவி பாரதியாரின் கவிதைகள் எப்போதும் அக்கினிக் குஞ்சாய், தீக்குழம்பாய் சுடர்விட்டு எரியும். அப்படிப்பட்ட பாரதியாரின் முக்கிய தொகுப்புகளை அவரது காலகட்டத்திற்கு பிறகு மிகச்சரியாக அடையாளம் காட்டிய சிலரில் மிகவும் குறிப்பிடத்தகுந்தவர் இளசை மணியன்.
பாரதியார் பிறந்த தூத்துக்குடி மாவட்ட எட்டயபுர மண்ணிலேயே பிறந்தவர் இளசை மணியன். சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் பாரதியார் பங்கேற்று எழுதிய படைப்புகள் பெரும்பாலும் வெளிவராமல் இருந்தது. அந்த நிலையில் சுதந்திரத்திற்கு பிறகு கல்கத்தா ஆராய்ச்சி நிலையத்திற்கு தேடிச்சென்று பாரதியாரைப் பற்றிய ஏராளமான தகவல்களை எடுத்து ஒன்றாகத் தொகுத்து 'பாரதி தரிசனம்' என்ற நூலை எழுதியவர்தான் இளசை மணியன்.
தமிழக அரசு ஊழியராக பணியாற்றி வந்த இளசை மணியன், பாரதியின் எட்டையபுரம் நினைவு இல்லத்திற்கு காப்பாளராகவும் இருந்தார். அதோடு பாரதியார் ஆரம்பத்தில் உருவாக்கிய முற்போக்கு எழுத்தாளர் வட்டத்தின் பொறுப்பாளராகவும் இருந்தார். பிறகு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து 50 ஆண்டு காலமாக பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11 அன்று பாரதியாரை சிறப்பிக்கும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.
ஒருவகையில் பாரதியாருடைய தீவிர பக்தனாகவும் செயல்பட்டு வந்தார். அப்படிப்பட்ட இளசை மணியன்தான் பாரதியாருக்கு நினைவு மண்டபம் கட்ட வேண்டும் என கலை இலக்கிய பெருமன்றம் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். அதன் அடிப்படையிலேயே எட்டயபுரத்தில் பாரதியாருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டது.
இப்படி தொடர்ந்து பாரதியார் புகழ் போற்றும் வகையில் செயல்பட்டு வந்த இளசை மணியன் வயது மூப்பு காரணமாக நேற்று(12/7/2020) மாலை திடீரென காலமானார். மகாகவி பாரதியாரின் அடியொற்றி வந்த மிக சிலரில் குறிப்பிடத்தகுந்தவரான இளசை மணியனின் உயிரிழப்பு இலக்கிய உலகிற்கு மிகவும் பேரிழப்பாகும்.
இளசை மணியன் இறப்பிற்கு தமிழக கலை இலக்கிய பெருமன்றம் இரங்கலை தெரிவித்துள்ளது. அதேபோல் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு, அவரது இறப்பிற்கு ஆழ்ந்த இரங்கலையும், வேதனையையும் தெரிவித்துள்ளார். உயிரிழந்த இளசை மணியன் உடல் அடக்கம் இன்று (13/7/2020) எட்டையபுரத்தில் நடந்தது. தூத்துக்குடி மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் முன்னின்று இறுதி சடங்கை நடத்தினார்கள்.