நெஞ்சுவலி என்று பூதலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க பணி மருத்துவர் இல்லாததால் தஞ்சாவூருக்கு அனுப்பி வைத்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
தஞ்சை மாவட்டம் பூதலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அருகில் உள்ள கூத்தூர் கிராமத்தில் இருந்து ஒரு பெண் 3 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனுடன் வந்தார். பையனுக்கு நெஞ்சுவலிக்கிறது என்று ஒ.பி யில் இருந்த செவிலியரிடம் சொல்ல, மாத்திரை கொடுத்தார் செவிலியர்.
மாத்திரையை விழுங்கிய சிறுவன் வாந்தி எடுக்க அதே செவிலியர் ஊசி போட்டுவிட்டு மறுபடி வலி வந்தால் தஞ்சாவூர் போங்க என்று அனுப்பிவிட்டார். இத்தனைக்கும் இரவு பணி மருத்துவர் இல்லை.
இந்த தகவல் அறிந்து அங்கு வந்த இளைஞர்கள், சிறுவனின் தாயிடம் விபரம் கேட்க சிறுவனுக்கு ஊசி போட்டது செவிலியர் என்பது கூட தெரியவில்லை. மறுபடி நெஞ்சுவலி வந்தால் தஞ்சை போகச் சொல்றாங்க வீட்டுக்கு போயிட்டு தான் தஞ்சை போகணும் என்று சொல்லிவிட்டு நெஞ்சுவலியோடு சிறுவனை அழைத்துச் சென்றார்.
மருத்துவர் பணியில் இல்லை என்பதை அறிந்த இளைஞர்கள் முற்றுகையிட்டனர். மேலும் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் மருத்துவர்கள் இல்லாததால் ஏழை மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் சுகாதார துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.