நெல்லையில் திருநங்கையை காதலித்து மணந்த இளைஞரின் பெற்றோர் கொலை மிரட்டல் விடுத்ததால், சேலம் மாநகர காவல்துறையில் திருநங்கை மனைவியுடன் இளைஞர் தஞ்சம் அடைந்தார்.
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை சேர்ந்தவர் பூமிகா (27). திருநங்கை. இவர், பி.டெக்., படித்துவிட்டு, நெல்லையில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலை செய்து வந்தார். அதே நகைக்கடையில் பரமக்குடியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் எலக்ட்ரீஷியனாக வேலைக்கு வந்து சேர்ந்தார். இருவரும் ஒரே கடையில் வேலை செய்து வந்ததால் நெருங்கி பழகினர். இந்த நெருக்கம் அவர்களுக்குள் காதலாக மலர்ந்தது. மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இதையடுத்து, கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு, அவர்கள் இருவரும் நெல்லையில் உள்ள ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதையறிந்த அருண்குமாரின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். ஆனாலும், பெற்றோர் எதிர்ப்பையும் மீறி அவர்கள் இருவரும் நெல்லையில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். இந்நிலையில், அருண்குமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் இருந்து, பூமிகாவுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வரத்தொடங்கியது. இதனால் பூமிகாவும், அருண்குமாரும் நெல்லையை காலி செய்துவிட்டு, சேலத்தை அடுத்துள்ள ஜாரி கொண்டலாம்பட்டிக்கு வந்து குடும்பம் நடத்தி வருகின்றனர்.

சேலத்தில் உள்ளதை தெரிந்து கொண்ட அருண்குமாரின் பெற்றோர், பூமிகாவை மீண்டும் மிரட்டத் தொடங்கினர். மகனை விட்டு ஒதுங்கிப் போய்விடுமாறும், இல்லாவிட்டால் தீர்த்துக்கட்டி விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை (அக். 4, 2019) சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமாரை நேரில் சந்தித்து புகார் அளித்தனர். பாதுகாப்பும் கேட்டனர். இதுகுறித்து விசாரிக்கும்படி, சேலம் நகர மாநகர மகளிர் காவல்நிலையத்திற்கு ஆணையர் உத்தரவிட்டார்.
மகளிர் காவல்துறையினர், அருண்குமாரின் பெற்றோரை செல்போனில் தொடர்புகொண்டு, எச்சரித்தனர். அவர்கள் இருவரையும் பிரிக்க முயற்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து திருநங்கை பூமிகாவும், அருண்குமாரும் வீடு திரும்பினர்.