திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித் நான்கு நாட்களுக்குப் பிறகு உயிரிழந்த நிலையில் (அக்டோபர் 29) மீட்கப்பட்டான். சுஜித்தின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு சார்பில் 10 இலட்சமும், அதிமுக சார்பில் 10 இலட்சமும் வழங்கினார். துணை முதல்வர் பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின், கட்சி சார்பில் 10 இலட்சம் வாங்கினார், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, 1 இலட்சம் வழங்கினார். சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் , திருமாவளன் இந்த குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிதி கொடுக்க வேண்டும் என்று அரசு வேலை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இப்படி பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும், பொதுமக்களும் தொடர்ந்து சுஜித்தின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இந்த நிலையில் ஊடகத்திடம் பேசிய சுஜித்தின் தந்தை பிரிட்டோ ஆரோக்கியதாஸ், “குழந்தை 25ஆம் தேதி மாலை கிணற்றுக்குள் விழுந்துவிட்டான். உடனேயே நாங்கள் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தோம். அனைத்து துறைகளில் இருந்தும் அதிகாரிகள் வந்துசேர்ந்தனர். நான்கு நாட்கள் தங்கி அவர்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்தனர். இதற்காக தமிழக முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். என் குழந்தைக்காக பிரார்த்தனையில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி” என்று கூறினார்.
சுஜித்தின் தாய் கலாமேரி பேசும்போது, என் குழந்தைக்காக பெரியவர்கள் முதல் சிறிய குழந்தைகள் வரை அனைவரும் பிரார்த்தனை செய்தீர்கள். உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. மீட்புப் பணிகளைச் சிறப்பாகவே செய்தனர். இடையில் பாறை இருந்ததால் அவர்களால் குழந்தையை மீட்க முடியவில்லை முன்னாடி காலத்தில் போர் போட்டிருந்தா வர இப்ப உள்ள சந்ததியினருக்கு சொல்லுங்க, அதுக்குள்ள குழியிருந்தாலும் அவுங்க முடிக்குவாங்க, அவுங்க கிட்ட சொல்லாம இருக்காதீங்க, அந்த குழி எந்த காலத்தில் போட்டிருந்தாலும் சரி, அதை வரும் சந்ததியினருக்கு சொல்லுங்க, இல்லனா நீங்களே முடிந்த மட்டும் இந்த குழிய அடைச்சிடுங்க, ஆழ்துளை கிணறுகளில் உயிரிழப்பு சம்பவம் இனி தொடரக் கூடாது.
எனது மகனின் இறப்பே இறுதியாக இருக்க வேண்டும். நா என் பிள்ளையா நினைச்சேன், ஆனா உலகமே அவுங்க பிள்ளையா நினைச்சு வேண்டுனாங்க, சுஜித் தவறி விழுந்த இடத்தில் நினைவிடம் கட்ட வேண்டும் என்பதே எனது ஆசை என்று கண்ணீர் மல்க கூறினார்.