![The young man who cheated many women in salem](http://image.nakkheeran.in/cdn/farfuture/suu_7QS932KsFsMYNzkNEVCABr_sWryHnHhBXCRIZ6U/1691653459/sites/default/files/inline-images/th_4584.jpg)
சேலத்தில், நான்கு பெண்களை காதல் வலையில் வீழ்த்தி பாலியல் உறவு கொண்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். சிறுமியை வன்புணர்வு செய்ததில் கர்ப்பம் அடைந்த விவகாரத்தைத் தொடர்ந்து வாலிபரின் செயல்கள் அம்பலமாகி உள்ளன.
சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் கனிகா (16 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்தச் சிறுமியை வாலிபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததில் கர்ப்பமாகி விட்டதாக அம்மாபேட்டை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், காவல்துறையினர் விசாரணை நடத்தினர். சிறுமியைக் கர்ப்பமாக்கிய வாலிபர், கன்னியாகுமரி மாவட்டம் இருளப்பபுரத்தைச் சேர்ந்த விஸ்வா (25) என்பது தெரிய வந்தது. இவர், சிறுமி கனிகா மட்டுமின்றி, மேலும் பல பெண்களையும் காதல் வலையில் வீழ்த்தி பாலியல் வன்கொடுமை செய்திருக்கும் அதிர்ச்சிகரமான தகவல்களும் வெளியாகின.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் விசாரித்தோம். கடந்த 2022ம் ஆண்டு கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் விஸ்வா வேலை செய்து வந்துள்ளார். அதே கடையில் வேலை செய்து வந்த சாமல்பட்டியைச் சேர்ந்த வனிதா (21 பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண்ணுடன் விஸ்வா நெருங்கிப் பழகி வந்துள்ளார். இந்தப் பழக்கம் அவர்களுக்குள் காதலாக மலர்ந்தது.
காதல் மயக்கத்தில் இருந்த வனிதாவை அடிக்கடி தனிமையில் அழைத்துச் சென்று விஸ்வா, அவருடன் பாலியல் உறவு கொண்டுள்ளார். ஒருகட்டத்தில் வனிதா தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இந்த திருமண வாழ்க்கை 7 மாதங்களுக்கு மேல் நீடிக்கவில்லை.
இதையடுத்து கிருஷ்ணகிரியில் பழக்கடை ஒன்றில் விஸ்வா வேலைக்குச் சேர்ந்தார். அப்போது, அதே பகுதியில் கணவரைப் பிரிந்து, இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த மேனகா (25 பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுடன் நெருங்கிப் பழகி வந்தார். ஆண் துணை இல்லாததைப் பயன்படுத்திக் கொண்ட விஸ்வா, அவரையும் காதல் வலையில் விழ வைத்தார். அவருடனும் தனியாக சந்தித்து பலமுறை தகாத உறவு கொண்டுள்ளார். பின்னர் மேனகாவை திருமணம் செய்து கொண்ட விஸ்வா, அவரையும், குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு பிழைப்புத் தேடி சேலம் வந்தார்.
சேலம் அம்மாபேட்டை சரஸ்வதி திரையரங்கம் பகுதியில் வீடு எடுத்து தங்கினார். இவர்களுடைய பக்கத்து வீட்டில் கணவரைப் பிரிந்து ஜானகி (40 பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும், அவருடைய 16 வயதான மகள் கனிகா என்பவரும் வசித்து வந்தனர். கணவர் இல்லாததைப் பயன்படுத்திக் கொண்ட வாலிபர் விஸ்வா, ஜானகியையும் தன் காதல் வலையில் வீழ்த்தினார். அந்தப் பெண்ணுடனும் அவர் தனிமையில் இருந்துள்ளார்.
இந்த விவகாரம் விஸ்வாவின் மனைவிக்குத் தெரிய வந்தது. இதையறிந்து அவர் அதிர்ச்சி அடைந்தாலும், வேறு வழியின்றி ஜானகியையும், அவருடைய மகளையும் தங்களோடு ஒரே வீட்டில் சேர்த்துக்கொண்டு ஒன்றாக வாழலாம் என்ற முடிவுக்கு வந்தார். இதனால் வாடகைப்பணமும் மிச்சமாகும் என்று கூறி விஸ்வாவையும் சம்மதிக்க வைத்துள்ளார்.
ஆனால் சில நாள்களிலேயே ஜானகிக்கும், மேனகாவுக்கும் தகராறு ஏற்பட்டது. அவர்களைச் சமாளிக்க முடியாமல் திணறிய விஸ்வா வேறுவழியின்றி, ஜானகியையும், அவருடைய மகள் கனிகாவையும் பக்கத்து தெருவில் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடித்தனம் வைத்தார். அதையடுத்து விஸ்வா அவர்களைப் பார்க்க அடிக்கடி அங்கு சென்று வந்தார்.
அப்போது ஜானகியின் மகளுடனும் விஸ்வா நெருங்கிப் பழகத் தொடங்கினார். தாயுடன் ஏற்கனவே வாழ்ந்துவரும் விஸ்வா, அவருடைய மகளுக்கும் வலை விரித்தார். தாய்க்குத் தெரியாமல் சிறுமிக்குப் பிடித்தமான உணவுப்பொருள்கள், உடைகள், அழகுசாதனப் பொருட்களை விஸ்வா வாங்கி கொடுத்துள்ளார். இதையடுத்து சிறுமி கனிகாவுடனும் விஸ்வா அடிக்கடி பாலியல் உறவில் இருந்துள்ளார். இதில்தான் அந்தச் சிறுமி கர்ப்பம் அடைந்தது தெரிய வந்தது.
இதையடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக விஸ்வா மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். இந்த நான்கு பெண்கள் தவிர, விஸ்வா வேறு எந்தெந்தப் பெண்களை கபளீகரம் செய்துள்ளார் என்பது குறித்தும் காவல்துறையினர் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.