![A young man who came to visit his family from abroad because of desire; Tragedy of death in the plane seat](http://image.nakkheeran.in/cdn/farfuture/HwPRkM6-8ywKfaoVzkA7Rk9ZXUMQB1UExxVeEIX3wUc/1694438365/sites/default/files/inline-images/a1434.jpg)
சிவகங்கையில் இருந்து ஓமன் நாட்டிற்கு வேலைக்குச் சென்றவர் சொந்த ஊருக்குத் திரும்பிய பொழுது விமானத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலை சென்னை வந்தடைந்தது. தொடர்ந்து அந்த விமானத்தில் பயணித்த அனைவரும் கீழே இறங்கத் தொடங்கினர். ஆனால் ஒரே ஒரு இளைஞர் மட்டும் இருக்கையை விட்டு எழவில்லை. உடனடியாக விமானப் பணிப் பெண்கள் அந்த இளைஞரிடம் சென்னை வந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். அவர் மயக்க நிலையில் இருக்கையிலேயே தூங்கியது போல் கிடந்தார். தொடர்ந்து அறிவுறுத்தியும் அவர் எழுந்திருக்காததால் சந்தேகமடைந்த பணிப்பெண் சென்னை விமான நிலைய மருத்துவக் குழுவினருக்குத் தகவல் தெரிவித்தார்.
உடனடியாக மருத்துவக் குழுவினர் அந்த இளைஞரை பரிசோதனை செய்ததில், அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் விமானத்தில் பயணித்த நேரத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் அந்த இளைஞர் குறித்து விசாரிக்கையில் அவர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த தனசேகர் (38) என்பது தெரியவந்தது. உடனடியாக சென்னை விமான நிலைய போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு இளைஞர் தனசேகரின் உடல் விமானத்திலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டது. பின்னர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் தனசேகரின் குடும்பத்தாருக்கு தொலைப்பேசி மூலம் விமானத்திலேயே உயிரிழந்த தகவலைத் தெரிவித்தனர்.