தமிழகத்தில் ஆப்டிகல் பைபர் கேபிள் என்கிற பாரத் இணைய சேவை திட்டத்தின் டெண்டரை ரத்து செய்துள்ளது மத்திய அரசு. பாரத் நெட் இணைய சேவை மூலம் தமிழ்நாட்டில் 55,000 கி.மீ தொலைவுக்கு ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் அமைப்பதற்கு மத்திய அரசு ரூ.1,950 கோடி நிதி ஒதுக்கியிருந்தது. பாரத் இணைய சேவை திட்டம் மூலம் நாடு முழுவதும் கிராமப்புறங்களுக்கு பிராட்பேண்ட் தொடர்பை உருவாக்குவதே இதன் நோக்கம். இந்தத் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தரைவழி ஆப்டிகல் ஃபைபர் கேபிள் வசதியை 55,000 கி,மீ தொலைவுக்குச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இத்திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலம் 12,524 கிராம ஊராட்சிகளுக்கு ஒரு வினாடிக்கு ஒரு ஜி.பி. அளவு வேகத்துடன் கூடிய இணைய வசதி கிடைக்கவிருந்தது.
இந்த நிலையில், இதற்கான டெண்டரை கடந்த டிசம்பரில் அறிவித்தது எடப்பாடி அரசு. இந்தியாவைச் சேர்ந்த ஒரு முக்கிய நிறுவனத்துக்கும், வெளி நாட்டைச் சேர்ந்த மற்றொரு நிறுவனத்துக்கும் இந்த டெண்டரை கொடுப்பதற்கான முடிவை எடுத்திருந்தனர். அதற்கேற்ப டெண்டர் விதிகளைத் திருத்தம் செய்ய, தகவல் தொழில் நுட்பத் துறை மற்றும் தமிழ்நாடு கண்ணாடி இழை கேபிள் கழகத்தின் உயரதிகாரிகளுக்கு அழுத்தம் தந்தனர் ஆட்சியாளர்கள். ஆனால், அதிகாரிகள் ஒப்புக் கொள்ளாததால் அவர்கள் மாற்றப்பட்டனர். இந்த நிலையில், இந்த டெண்டரில் ஊழல் நடப்பதாகக் குற்றம்சாட்டிய 'அறப்போர் இயக்கம்', அது தொடர்பாக, மத்திய வர்த்தக அமைச்சகம், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்தும் துறை (DPITT), மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் ஆகியவற்றிற்குப் புகார் அனுப்பியியது. அந்தப் புகாரின் மீது விசாரணையை துவக்கியது மத்திய அரசு. மேலும், இது தொடர்பாக, விளக்கம் அளிக்கவும் எடப்பாடி அரசுக்கு உத்தரவிட்டது மத்திய அரசு.
ஆனால், இந்த விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில், கடந்த வாரம் டெண்டரை இறுதி செய்து குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு காண்ட்ராக்டை ஒதுக்க திட்டமிட்டு டெண்டரை திறக்க முடிவு செய்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதனை அறிந்த மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தும் துறையின் அதிகாரிகள், டெண்டரை நிறுத்துமாறு கடைசி நேரத்தில் கடிதம் அனுப்பினர். இதனால் டெண்டர் திறக்கப்படவிருந்த கடைசி அரை மணி நேரத்திற்கு முன்பு சம்மந்தப்பட்ட டெண்டருக்கு தடை விழுந்தது. தடை ஏற்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தார் முதல்வர் எடப்பாடி! தற்காலிக தடை தான் என நம்பினார் அவர். இந்த நிலையில், இந்தத் திட்டத்தில் நடந்துள்ளவைகளை முழுமையாக விசாரித்த மத்திய வர்த்தகத்துறை, டெண்டரில் விதி முறைகள் முறையாக பின்பற்றவில்லை என்று சொல்லித் திட்டத்தை தற்போது ரத்து செய்திருக்கிறது. 1,950 கோடி ரூபாய் திட்டத்தில் முதல்வர் எடப்பாடி கண்ட கனவு பணால் ஆனதில் அவரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் அப்- செட்டாகியிருக்கிறார்கள்!