மதுரை மாவட்டத்தில் உள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருப்பதாகவும், இது அரும்பெரும் சாதனை என்றும், தமிழகத்தில் விளம்பரங்களும், பேட்டிகளும் கொடுத்து வருகின்றனர் மத்திய, மாநில அமைச்சர்கள். அதேநேரத்தில், மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வருவது குறித்த சந்தேகங்களும் எழுந்தன. அதனால், ஹக்கீம் காசிம் என்பவர், மத்திய குடும்பநலம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில கேள்விகளைக் கேட்டிருந்தார்.

மத்திய அமைச்சரவை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒப்புதல் அளித்திருக்கிறதா? கட்டுமானப் பணிகளுக்கான அனுமதி கிடைத்துவிட்டதா? நிதி எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது? என்பது போன்ற அவருடைய கேள்விகளுக்கு, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரையிலும் ஒப்புதல் அளிக்கவில்லை, எந்த நிதியும் ஒதுக்கவில்லை என்று பதில் அளித்திருக்கிறது அந்த அமைச்சகம்.

இந்த பதிலால் ‘அட போங்கப்பா.. நீங்களும் உங்க எய்ம்ஸ் மருத்துவமனையும்..’ என்று தென்மாவட்ட மக்கள் எரிச்சல் அடைய, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் “படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முறையாக நடவடிக்கைகள் முடிந்த பின்னர் தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கும்.” என்றார்.

தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான விரிவான திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. மத்திய அரசு விரைவிலேயே நிதி ஒதுக்கும்.” என்று கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015-ல் அறிவிப்பு வந்தது. 2018 ஜூனில் நிலம் ஒதுக்கீடு ஆனது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படாத நிலையில், அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வரவிருக்கிறது. அதனால், நிதி ஒதுக்கப்படுமா? வெற்று அறிவிப்பாக இருந்துவிடுமா? என, சந்தேகங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.