ஒன்றா? இரண்டா? தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமெரிக்காவில்தான் எத்தனை பட்டங்கள்? தமிழகத்திலுள்ள அவருடைய ஆதரவாளர்களுக்கு இனி கொண்டாட்டம்தான்! போஸ்டரோ,நோட்டீஸோ, டிசைன் டிசைனாக ஓ.பி.எஸ்.பெயருக்கு முன்னால் பட்டங்களைப் போட்டு அசத்திவிடுவார்கள்.

ஓ.பன்னீர்செல்வத்தின் அமெரிக்க விசிட்டில் அப்படி என்னதான் நடக்கிறது? அமெரிக்கா சென்றுள்ள தமிழ்நாடு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாஷிங்டன் டி.சி.யிலுள்ள வாட்டர் கேட் ஹோட்டலில் அமெரிக்க- இந்திய SME கவுன்சில் நிர்வாகிகளை சந்தித்தார்.
அவர்களிடம் தமிழகத்திற்கு தொழில் முதலிடுகள் பெறுவது குறித்து ஆலோசனை நடத்தினார். ஹுஸ்டன் ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, அங்கு ஹூஸ்டன் ஸ்ரீ மீனாட்சி திருக்கோவில் தேவஸ்தானம் சார்பில் புனரமைக்கப்பட்ட திருமண மண்டபத்தின் கல்வெட்டைத் திறந்து வைத்தார்.

அதன்பிறகு, ஸ்ரீ மீனாட்சி திருக்கோவில் சொசைட்டி, ஹூஸ்டன் தமிழ் ஆய்வு இருக்கை மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் நடந்த விழாவில், டெக்சாஸின் ஃபேர்லாண்ட் மேயர் டாம்ரிட், 14-11-2019 தினத்தை‘O.P.S. DAY’(ஓ.பி.எஸ். நாள்) என்று அறிவித்து கவுரவப்படுத்தினார்.

ஸ்ரீபத்மினி ரங்கநாதன் ட்ரஸ்டி சார்பில்‘பண்பின் சிகரம்’ என்ற பட்டமும், மெட்ரோப்ளக்ஸ் தமிழ்ச்சங்கம் சார்பில் ‘வீரத்தமிழன்’என்ற பட்டமும் ஒ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்டது. அவ்விழாவில் ஓ.பி.எஸ்., தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்.